அதிக லாப ஆசை காண்பித்து பெண்களிடம் ரூ.50 கோடி மோசடி?

கோவிந்தராஜ நகர்; பணக்கார பெண்களுக்கு அதிக லாபம் ஆசை காட்டி, கோடிக்கணக்கில் மோசடி செய்த சலுான் உரிமையாளர்கள் மீது, புகார் பதிவாகியுள்ளது.

பெங்களூரின் கோவிந்தராஜ நகர் தலகட்டபுராவில் உள்ள, 'பெரிமீட்டர் சலுான்' பிரபலமானது. கர்நாடகா முழுவதும் கிளைகள் வைத்துள்ளது. இதனை ரக் ஷா ஹரிகால் சல்வா, சுனித் மெஹதா, திவாரி ஆகியோர் நடத்துகின்றனர். இந்த சலுானுக்கு பணக்கார பெண்கள் அதிக எண்ணிக்கையில் வருகின்றனர்.

இவர்களிடம் சலுான் உரிமையாளர்கள், 'எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால், லட்சக்கணக்கான லாபம் கிடைக்கும்' என, ஆசை காட்டினர். இதை உண்மையென நம்பிய பெண்கள், தலா 10 லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்தனர்.

ஆனால் பணம் கொடுத்து நீண்ட நாட்கள் ஆகியும், லாபம் தரவில்லை. பணத்தையும் தராமல் மோசடி செய்தனர். இது குறித்து, போலீஸ் நிலையங்களில் பெண்கள் புகார் அளித்தனர்.

போலீசாரும், சலுான் உரிமையாளர்கள் ரக்ஷா ஹரிகால் சல்வா, சுனித் மெஹதா, திவாரி மீது வழக்கு பதிவு செய்து, விசாரணையை துவக்கினர். முதற்கட்ட விசாரணையில், பெண்களிடம் 50 கோடி ரூபாய் வரை, மோசடி நடந்திருக்கலாம் என, தெரிகிறது.

Advertisement