மூணாறில் ஜீப் கவிழ்ந்து ஊரப்பாக்கம் பயணி பலி

மூணாறு:மூணாறு அருகே தேயிலை தோட்டத்திற்குள் ஜீப் கவிழ்ந்து, சென்னையைச் சேர்ந்த சுற்றுலா பயணி உயிரிழந்தார்.

கோயம்பேடைச் சேர்ந்தவர் மணிரத்னம், 34, ஊரப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சதீஷ், 32. நண்பர்களான இருவரும், குடும்பத்தினருடன் நேற்று முன்தினம், மூணாறுக்கு சுற்றுலா சென்றனர். போதமேடு பகுதி தனியார் விடுதியில் தங்கினர்.

சுற்றுலா பகுதிகளுக்கு செல்ல, நேற்று காலை ஜீப்பில் புறப்பட்டனர். பள்ளிவாசல் எஸ்டேட், ஆற்றுக்காடு டிவிஷனைச் சேர்ந்த ஓட்டுநர் அஸ்வின், 36, என்பவர் ஜீப் ஓட்டினார்.

விடுதியில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில், போதமேடு பகுதியில் வளைவில் திரும்புவதற்காக பின்நோக்கி நகர்த்தியபோது, கட்டுப்பாட்டை இழந்த ஜீப், 100 அடி பள்ளத்தில் தேயிலை தோட்டத்திற்குள் கவிழ்ந்தது.

அதில் மணிரத்னம், அவரது மனைவி பிரீத்தி, தாய் தேன்மொழி, 54, மாமியார் செல்லம், 50, சகோதரி காவேரி, 27, சதீஷ், அவரது மனைவி சிவபிரியா, 30, மகள் தியா, 5, தாய் வரலட்சுமி, 55, மற்றும் அஸ்வின், 36, ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். சதீஷின் தந்தை பிரகாஷ், 58, தலையில் பலத்த காயமடைந்து அங்கேயே இறந்தார்.

அங்கிருந்த பொதுமக்கள், காயமடைந்தோரை மீட்டு, மூணாறு டாடா மருத்துவமனையில் சேர்த்தனர். ஓட்டுநர் தவிர மற்றவர்கள், தேனி அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். மூணாறு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement