பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 'நீட்' மறு தேர்வு நடத்த உத்தரவு

இந்துார்: நாடு முழுதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு, கடந்த மே 4ல் நடந்தது.


மத்திய பிரதேசத்தின் இந்துார், உஜ்ஜைன் மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களில் மின்வெட்டு ஏற்பட்டதால், தேர்வெழுத முடியாமல் தேர்வர்கள் அவதிப்பட்டனர்.



மறு தேர்வு கோரி ம.பி., உயர் நீதிமன்ற இந்துார் கிளையில், பாதிக்கப்பட்ட 75 தேர்வர்கள் மனு தாக்கல் செய்தனர். இரு தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

நீதிபதி சுபோத் அபயங்கர் அளித்த தீர்ப்பு:



இந்த விவகாரத்தை பொறுத்தவரை, தேர்வர்கள் எந்த தவறும் செய்யவில்லை. போதுமான அடிப்படை வசதிகள் இல்லாததால், அவர்களால் சரிவர தேர்வு எழுத முடியவில்லை.


எனவே, பாதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு விரைவாக மறு தேர்வு நடத்தி, தேசிய தேர்வு முகமை முடிவுகளை வெளியிட வேண்டும்.



மேலும், மறு தேர்வில் அவர்கள் பெறும் மதிப்பெண்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, தரவரிசை பரிசீலிக்கப்பட வேண்டும். தற்காலிக விடைக்குறிப்பு அறிவிக்கப்பட்ட பின், அதாவது ஜூன் 3ம் தேதி மனு தாக்கல் செய்த தேர்வர்கள், இந்த உத்தரவின் பலனையும் பெற மாட்டர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement