இணைந்து செயல்பட அ.தி.மு.க., -- பா.ஜ., முடிவு; பழனிசாமி பிரசார பயணத்தில் பங்கேற்க அழைப்பு

19

சென்னை: பா.ஜ.,வுடன் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ள அ.தி.மு.க., அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி பிரசார பயணத்தில் பங்கேற்க, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு அழைப்பு விடுத்துள்ளது.


கடந்த 2024 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும் தனித்தனியாக போட்டியிட்டு தோல்வி அடைந்தன. அதனால், வரும் சட்டசபை தேர்தலுக்காக, கடந்த ஏப்ரல் 11ல், இரு கட்சிகளும் மீண்டும் கூட்டணி சேர்ந்தன.

நெருடல்



ஆனாலும், ஹிந்து முன்னணி நடத்திய முருக பக்தர்கள் மாநாட்டில், அ.தி.மு.க., தலைவர்கள் பங்கேற்ற நிலையில், ஈ.வெ.ராமசாமி, அண்ணாதுரை ஆகியோரை விமர்சித்து, 'வீடியோ' ஒளிபரப்பப்பட்டது, இது சர்ச்சையானது.



இதற்கிடையில், தமிழகத்தில் அடுத்து அமையப் போவது தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிதான். அந்த ஆட்சியில் பா.ஜ., நிச்சயம் பங்கேற்கும் என மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தொடர்ந்து பேசி வருகிறார். இதுவும், அ.தி.மு.க.,- பா.ஜ.,வுக்கு இடையே நெருடலை ஏற்படுத்தியது.


இதற்கிடையில், அ.தி.மு.க., - - பா.ஜ., கூட்டணியை உடைக்க, தி.மு.க.,வும் அதன் கூட்டணி கட்சிகளும், முயற்சித்து வருவதாக, பா.ஜ., தலைவர்கள் கூறி வருகின்றனர்.


சிறுபான்மையினர் ஓட்டுகள், தி.மு.க., கூட்டணிக்குதான் என்பது உறுதியான நிலையில், பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லாவிட்டால், நிலைமை மோசமாகி விடும் என, அ.தி.மு.க., நிர்வாகிகள் பலரும், பழனிசாமியிடம் கூறியுள்ளனர்.

போராட்டம்



அதைத் தொடர்ந்து, இரு கட்சிகளும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், தி.மு.க., அரசுக்கு எதிராக, போராட்டங்களை நடத்த, இரு கட்சிகளும் திட்டமிட்டுள்ளன. இந்நிலையில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, வரும் 7 முதல் 21ம் தேதி வரை, 12 நாட்கள் முதல்கட்ட பிரசார பயணம் மேற்கொள்கிறார்.



கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சட்டபை தொகுதியில், தனது சுற்றுப்பயணத்தை துவங்கும் பழனிசாமி, 8ம் தேதி வரை, கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, கோவை தெற்கு தொகுதியில் பிரசாரம் செய்கிறார்.


இது தொடர்பாக நயினார் நாகேந்திரனிடம் பேசிய பழனிசாமி, மேட்டுப்பாளையத்தில் நடக்கும் பிரசார பயண துவக்க விழாவில் பங்கேற்க அழைத்துள்ளார். அதை ஏற்றுக் கொண்ட நயினார் நாகேந்திரன் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.

வலுப்படும்



அதுபோல், பழனிசாமியின் பிரசார பயண கூட்டங்களில், தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


அவர்களும் பங்கேற்கும்போது, அ.தி.மு.க.,- பா.ஜ., கூட்டணி தொண்டர்கள் அளவில் வலுப்படும். மேலும் பல கட்சிகளும் கூட்டணிக்கு வரும் என, பா.ஜ., நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Advertisement