துப்பாக்கியை காட்டி சுட்டுவிடுவேன் என மிரட்டி இருக்கிறார்கள்; போலீசார் குறித்து திருமாவளவன் "திடுக்"

24

சிவகங்கை: துப்பாக்கியை காட்டி, என் வாயில் வைத்து சுட்டுவிடுவேன் என போலீசார் மிரட்டி இருக்கிறார்கள் என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் போலீஸ் சித்ரவதையில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினருக்கு வி.சி.க தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் நிருபர்கள் சந்திப்பில் திருமாவளவன் கூறியதாவது:


போலீஸ் விசாரணையில் இளைஞர் மரணம் அடைந்த விவகாரத்தில் எப்.ஐ.ஆர்., இல்லாமல்
விசாரித்தது போலீசாரின் அத்துமீறல். எப்.ஐ.ஆர்., இல்லாமல் எப்படி வழக்குப்பதிவு செய்தார்கள்? போலீசார், ரவுடிகளைப் போல நடந்து கொள்வதாக ஒருமுறை உச்சநீதிமன்றமே குறிப்பட்டது.


11 கட்டளைகள்

உச்சநீதிமன்றம் வகுத்துள்ள 11 கட்டளைகளை போலீசார் பின்பற்றுவதில்லை. அஜித்குமார் கொலை என்பது வெறும் அத்துமீறல் மட்டுமல்ல, அரச பயங்கரவாதம். அஜித்குமாரின் குடும்பத்திற்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

விழிப்புணர்வு

போலீஸ் மரணங்கள் எல்லா ஆட்சியிலும் நடக்கிறது. எல்லா மாநிலங்களிலும் நடக்கிறது. யார் முதல்வராக இருந்தாலும் நடக்கிறது. நான் இருந்தால் கூட இந்த போலீசாரின் போக்கு இப்படித்தான் இருக்கும். போலீசாருக்கு மனித உரிமைகள் குறித்து எந்த விழிப்புணர்வும் இல்லை. அடித்தால் தான் உண்மையை வரவழைக்க முடியும் என போலீசார் நினைக்கிறார்கள். அவர்களுக்கு பயிற்சி அவசியம்.

மிரட்டினாங்க

நானும் போலீசார் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளேன். என்னை போலீசார் மிகக் கடுமையாக பேசியிருக்கிறார்கள். துப்பாக்கியை காட்டி என் வாயில் வைத்து சுட்டு விடுவேன் என போலீசார் மிரட்டி இருக்கிறார்கள். இது காவல் துறையின் ஒரு பயிற்சி முறையாக இருக்கிறது. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

Advertisement