திருப்புவனம் வழக்கில் திடீர் திருப்பம்; புகார் தந்த டாக்டர் மீது மோசடி வழக்கு; பின்னணி விவரம்!

25

திருப்புவனம்: போலீசாரின் விசாரணையில் உயிரிழந்த இளைஞர் அஜித்குமார் மீது புகார் அளித்த டாக்டர் நிகிதா மீது மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு ஜூன் 27ல், மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த சிவகாமி, 76, என்பவர், தன் மகள் டாக்டர் நிகிதாவுடன் தரிசனம் செய்ய வந்தார். சிவகாமியால் நடக்க முடியாத நிலையில், கோவில் தற்காலிக ஊழியர் அஜித்குமார், 29, 'வீல் சேர்' கொண்டு வந்து கொடுத்துள்ளார்.


அப்போது, காரை பார்க்கிங் செய்யுமாறு சாவியை அஜித்குமாரிடம் நிகிதா கொடுத்துள்ளார். வழிபாடு முடிந்து சிவகாமியும், நிகிதாவும் காருக்கு திரும்பிய போது, கார் இருக்கையில் வைத்திருந்த பையில் 9.5 சவரன் நகையை காணவில்லை.

இது குறித்து நிகிதா கேட்டதற்கு, அஜித்குமார் முறையான பதில் தராததால், திருப்புவனம் போலீசில் நகை திருட்டு குறித்து புகார் அளித்தார். போலீசார், அஜித்குமாரை கோவில் அருகே வைத்து விசாரித்தனர். விசாரணைக்கு பின், அஜித்குமார் உடல்நலம் பாதிக்கப்பட்டு, திருப்புவனம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.


இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
போலீசாரின் விசாரணையில் உயிரிழந்த இளைஞர் அஜித்குமார் மீது புகார் அளித்த டாக்டர் நிகிதா மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


கடந்த 2011ம் ஆண்டு ரூ.16 லட்சம் மோசடி செய்ததாக மதுரை திருமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் நிகிதா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு ஆசிரியர் மற்றும் வி.ஏ.ஓ., வேலை வாங்கி தருவதாக கூறி நிகிதா பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் அளித்தவர் டாக்டர் நிகிதா. இவரது புகாரின் பேரில் விசாரணையின் போது அஜித்குமார் அடித்து கொல்லப்பட்டார். அஜித்குமாரை குற்றம் சாட்டிய நிகிதா ஏற்கனவே பண மோசடி புகாரில் சிக்கியவர். நிகிதா, அவரது தாய் சிவகாமி குற்றப்பின்னணி கொண்டவர்கள் என்பது அம்பலம் ஆகியுள்ளது.

Advertisement