புதிய மிஷின் அறிமுகத்தால் பொருள் விநியோகம் தாமதம்; அரசு அறிமுகம் செய்த திட்டத்திலும் நுாதன மோசடி

திருப்புத்துார் : ரேஷன் கடைகளில் மக்கள் வாங்கும் பொருட்கள் எடை குறைவாக இருப்பதாக வந்த புகாரை அடுத்து அரசு அறிவித்த புதிய திட்டத்திலும் சில விற்பனையாளர்கள் மோசடி செய்வது தெரியவந்துள்ளது.

ரேஷன் பொருள் விநியோகத்தில் நீண்ட காலமாக நிலவும் ‛எடைக்குறைவை' தவிர்க்க விரும்பிய அரசு ‛ப்ளூ டூத்' இணைக்கப்பட்ட மின்னணு எடை இயந்திரத்தை' ரேஷன் கடைகளில் அறிமுகப்படுத்தியது.

ஜூன் 1 முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில் பொருட்கள் விநியோகிப்பதில் அதிக தாமதம் ஏற்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இணையதளத்தில் சர்வர் வேகமில்லாததே' தாமதத்திற்கான காரணமாக ரேஷன்கடை பணியாளர்கள் கூறுகின்றனர். இந்த திட்டத்தால் வழக்கத்தை விட நாள் ஒன்றுக்கு குறைவான எண்ணிக்கையிலேயே பொருட்கள் வழங்க முடிகிறது என்கின்றனர். ஆனால் பொதுமக்கள் பொருட்கள் வழங்க தாமதமாவதற்கு வேறு ஒரு காரணத்தை கூறுகின்றனர்.

அரசு அறிவித்தபடி கடை எடையாளர்கள் ‛ப்ளூ டூத்' இணைத்த எடை இயந்திரத்தில் பொருட்களை எடையிட்டு பில் போட வேண்டும். ஆனால் பல்வேறு அளவுகளில் ‛ரெடி மேடாக' பொருட்களை கட்டி வைத்துள்ள பைகளை வைத்து எடை போடுகின்றனர். பில் வந்தவுடன் எடை இயந்திரத்தில் வைக்கப்பட்ட பைகளை எடுத்து வேறு இடத்தில் வைத்து விட்டு வழக்கம் போல் பொருட்களை மீண்டும் எடை இயந்திரத்தில் வைத்து பழைய முறைப்படி பொருட்களை எடை போட்டு வழங்குவதாக மக்கள் கூறுகின்றனர். ஒருவருக்கு இரு முறை எடை போடுவதே தாமதத்திற்கு காரணமாக கூறுகின்றனர். இதனால் அரசு எதிர்பார்த்த ‛ சரியான எடை' திட்டமும் வெற்றி அடையவில்லை. தாமதத்தால் பொதுமக்களும் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.

இது குறித்து ரேஷன்கடை பணியாளர்கள் கூறுகையில்,‛ எடைக்குறைப்பை சரி செய்ய வேண்டும் என்றால் ரேஷன் கடைகளுக்கு சரியான எடையில் பொருட்கள் விநியோகிக்க வேண்டும். மூடையில் 50.6 கிலோவிற்கு பதிலாக 47 கிலோ எஜன எடை குறைவாகத்தான் எங்களுக்கு பொருட்கள் வழங்கப்படுகிறது. கோடவுன்களில் மூடைகள் பராமரிப்பின் போது சிதறும் தானியங்களுக்கு இழப்பீடாக 5 சதவீதம் வரை ‛கழிவு' அவர்களுக்கு தரப்படுகிறது. ஆனால் எங்களுக்கு எடை குறைவிற்கு இழப்பீடாக ‛கழிவு' தரப்படுவதில்லை.

கோதுமை, அரிசி ,சர்க்கரை,புருப்பு பொருட்களுக்கு கழிவாக 3 சதவீதம், வேகமான இணைய வசதியுடன், இணையதளம் சீராக வேலை செய்தால் எடை குறைவு என்பதும், விநியோகத்தில் தாமதம் என்பதும் ரேஷன்கடைகளில் இருக்காது' என்றார்

அரசு அதிகாரிகள் ரேஷன் கடைகளில் ஆய்வு செய்து ரேஷன் கடைகளுக்கு சரியான அளவில் பொருட்கள் வழங்கவும், தேவையானால் எடை குறைவிற்கான ‛ கழிவு' வழங்கவும், கூடுதல் எடை இயந்திரங்களை அகற்றுவதோடு, சரியான எடையில் ரேஷன் பொருட்கள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement