ஜெயதேவா மருத்துவமனைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

மைசூரு :ஹாசனில் மாரடைப்பால் இறப்போர் எண்ணிக்கை அதிகரிப்பதால், பலரும் கலக்கம் அடைந்துள்ளனர். மைசூரின் ஜெயதேவா இதய நோய் மருத்துவமனைக்கு, பரிசோதனை செய்து கொள்ள வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஹாசன் மாவட்டத்தில், மாரடைப்புக்கு பலியாவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. வெறும் ஒன்றரை மாதத்தில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

எந்த தீய பழக்கங்களும் இல்லாதவர்களும், திடீரென மாரடைப்பால் இறப்பது, மக்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. தங்களின் இதயத்தை பற்றி கவலைப்படுகின்றனர்.

நோய் அறிகுறி இல்லாதவர்களும், மருத்துவமனைக்கு சென்று, இதய பரிசோதனை செய்து கொள்கின்றனர்.

மைசூரு, மாண்டியா, சாம்ராஜ்நகர், ஹாசன் மாவட்டங்களில் இருந்தும், மைசூரின் ஜெயதேவா இதய நோய் மருத்துவமனைக்கு வந்து, பரிசோதனை செய்து கொள்கின்றனர்.

இதற்கு முன்பு தினமும், 150 முதல் 200 நோயாளிகள் வந்தனர். ஆனால் இப்போது 500 முதல் 1,000 பேர் வரை வருகின்றனர். தினமும் அதிகாலையிலேயே, மருத்துவமனையின் ஓ.பி.டி.,யில் குவிகின்றனர்.

மைசூரு ஜெயதேவா இதய நோய் மருத்துவமனை டாக்டர் சதானந்த் அளித்த பேட்டி:

எங்கள் மருத்துவமனையில், திடீரென வெளி நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இவர்களில் ஹாசனை சேர்ந்தவர்கள் எண்ணிக்கை அதிகம். இவர்களில் 90 சதவீதம் பேருக்கு, இதயத்தில் எந்த பிரச்னையும் இல்லை. பீதி காரணமாக மருத்துவமனைக்கு வந்து, பரிசோதனை செய்து கொள்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement