ஆட்டோவுக்குள் கிடந்த காதல் ஜோடி சடலங்கள்

பெலகாவி, : திருமணத்திற்கு பெற்றோர் சம்மதிக்காததால், ஆட்டோவினுள் காதலர்கள் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

பெலகாவி மாவட்டம், கோகாக் ரூரல் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட சிக்கநந்தி கிராமத்தின் புறப்பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில், நீண்ட நேரமாக ஆட்டோ ஒன்று நின்றிருந்தது.

சந்தேகம் அடைந்த அக்கிராமத்தினர், கோகாக் ரூரல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த அவர்கள், ஆட்டோவின் கதவை திறந்து பார்த்தபோது, இளைஞரும், இளம்பெண்ணும் இறந்து கிடந்தனர்.

இருவரின் உடல்களையும் மீட்ட போலீசார், மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல்கட்ட விசாரணையில், இறந்து கிடந்தவர்கள், சவதத்தியின் முனவள்ளி டவுனை சேர்ந்த ராகவேந்திரா ஜாதவ், 28, ரஞ்சிதா, 26, என்று தெரிய வந்தது.

இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். தன் விருப்பத்தை பெற்றோரிடம் ரஞ்சிதா தெரிவித்துள்ளார்.

அவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். 15 நாட்களுக்கு முன்பு அவசர அவசரமாக ரஞ்சிதாவுக்கு வேறொரு இளைஞருடன் நிச்சயதார்த்தம் முடித்தனர்.

இந்நிலையில், நேற்று காலையில் இருவரும் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதால், இரு குடும்பத்தினரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

ராகவேந்திராவின் பெற்றோர் கூறுகையில், 'என் மகன் காதலிக்கும் விஷயம் எங்களுக்கு தெரியாது. நேற்று முன்தினம் இரவு உணவு சாப்பிடாமல் உறங்க சென்றார்.

இப்போது தற்கொலை செய்து கொண்டதாக கூறுகின்றனர். மகனின் மரணத்தில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. மகனை கொலை செய்துள்ளனர். எனவே, முறையாக விசாரணை நடத்த வேண்டும்' என்றனர்.

இது குறித்து போலீசில் புகார் செய்துள்ளனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement