சிறுமியை கண்டுபிடிக்க லஞ்சம்; எஸ்.ஐ., தம்பதி மீது வழக்குப் பதிவு

புதுச்சேரி; புதுச்சேரியில், காணாமல் போன சிறுமியை கண்டுபிடிக்க ரூ.5 ஆயிரம் வாங்கிய எஸ்.ஐ., தம்பதி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி அடுத்த வில்லியனுார் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை, கடந்தாண்டு ஜூன் 5ம் தேதி கேரளாவை சேர்ந்த வாலிபர் கடத்தி சென்றதாக, சிறுமியின் தாய் வில்லியனுார் சப் இன்ஸ்பெக்டர் சரண்யாவிடம் புகார் அளித்தார். புகார் மீது, எஸ்.ஐ., நடவடிக்கை எடுக்காமல், தாமதப்படுத்தியதாக தெரிகிறது.

மறுநாள், வெளிநாட்டில் இருந்து வந்த சிறுமியின் தந்தை, எஸ்.ஐ.,யை சந்தித்து, முதல் தகவல் அறிக்கை நகல் கேட்டார். அதற்கு, எஸ்.ஐ., சரண்யா, 'பெண்ணை சரியாக வளர்க்க துப்பில்லை' என, பேசி அனுப்பியுள்ளார்.

அதன்பிறகு, சிறுமியை தேடி அசாம் சென்ற எஸ்.ஐ., சரண்யா, சிறுமியின் தந்தையை போனில் தொடர்பு கொண்டு, செலவிற்கு பணம் கேட்டுள்ளார். சிறுமியின் தந்தை, ஜி-பேவில் ரூ.5,000 அனுப்பி வைத்துள்ளார். ஆனால், எஸ்.ஐ., சிறுமியை கண்டுபிடிக்காமல் புதுச்சேரி திரும்பினார்.

இதுகுறித்து, சிறுமியின் தந்தை கடந்தாண்டு ஜூலை 6ம் தேதி டி.ஜி.பி.,யிடம் புகார் மனு அளித்தார். அதன்பேரில் விசாரணை நடந்தது. அப்போது, எஸ்.ஐ., சரண்யாவின் கணவரான பிரபு (தற்போதைய பாகூர் சப் இன்ஸ்பெக்டர்), கடந்தாண்டு ஆகஸ்ட் 6ம் தேதி இரவு, சிறுமியின் தந்தையை போனில் தொடர்பு கொண்டு பேசியதுடன், அவர் அனுப்பிய ரூ.5,000 பணத்தை, அவரது வங்கி கணக்கிற்கு ஜி-பே.,வில் திருப்பி அனுப்பி வைத்துள்ளார்.

இந்த விவகாரத்தை தொடர்ந்து எஸ்.ஐ., சரண்யா, கடந்த மூன்று மாதங்களுக்கு முன் வில்லியனுாரில் இருந்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில், சிறுமியின் தந்தை, காணாமல் போன தனது மகளை கண்டுபிடித்து தர லஞ்சம் வாங்கியதாக சப் இன்ஸ்பெக்டர் சரண்யா, அதனை திரும்ப கொடுத்த அவரது கணவரான சப் இன்ஸ்பெக்டர் பிரபு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ராமு மற்றும் போலீசார், சப் இன்ஸ்பெக்டர் சரண்யா, அவரது கணவர் பிரபு மீது குற்றத்திற்கு உடந்தையாக இருத்தல், லஞ்சம் வாங்கியது, அரசு ஊழியர் நன்னடத்தை விதிமீறி ஒழுங்கீன செயலில் ஈடுபட்டது ஆகிய மூன்று பிரிவுகளில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இசம்பவத்தை தொடர்ந்து, சப் இன்ஸ்பெக்டர் தம்பதியை சஸ்பெண்ட் செய்ய புதுச்சேரி போலீஸ் தலைமையகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Advertisement