கழுத்தை நெரிக்கும் மின்கட்டண சுமை; புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியே தீர்வு திருப்பூர் தொழில்துறையினர் எதிர்பார்ப்பு

திருப்பூர்; மின்கட்டண உயர்வால், உற்பத்தி செலவு அதிகரித்து வருவதால், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென, திருப்பூர் பின்னலாடை தொழில் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

திருப்பூர் பனியன் தொழிலில், பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களுக்கு, 'ஜாப் ஒர்க்' பணிகளை செய்யும், 'நிட்டிங்', 'பிரின்டிங்', சாய ஆலைகள், கம்ப்யூட்டர் எம்பிராய்டரிங், எலாஸ்டிக், காஜாபட்டன் என, பல்வேறு சார்ந்து இயங்குகின்றன. பின்னலாடை வடிவமைப்புபிரிவுநீங்கலாக, மற்ற பிரிவுகளில், அதிக திறனுள்ள இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

குறிப்பாக, சாய ஆலைகளில் சாயமிடவும், சாயக்கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யும் பொது சுத்திகரிப்பு நிறுவனங்களிலும், புதிய தொழில்நுட்ப இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதனால், மொத்த உற்பத்தி செலவில், 35 முதல் 40 சதவீதம் வரை, மின்கட்டண சுமை ஏற்படுகிறது.மின்சாரத்தை மட்டுமே சார்ந்து இயங்காமல், மரபுசாரா எரிசக்தி உற்பத்தியும் இருந்தால் மட்டுமே, மின் கட்டண சுமை குறையும். எனவே, மத்திய அரசு, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்காக, பசுமை சார் எரிசக்தி உற்பத்திக்கான மானிய திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து, திருப்பூர் பின்னலாடை தொழில் கூட்டமைப்பு சார்பில், மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள கடிதம்:

தமிழகத்தில், ஒவ்வொரு ஆண்டும் மின் கட்டணம் உயர்த்தப்படுவதால், தொழில்கள் வடமாநிலத்தை நோக்கி பயணிக்க துவங்கி விட்டன. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களை பாதுகாக்க, மின் கட்டண சுமையில் இருந்து தீர்வு வழங்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள், தொழில்துறையினர் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி செய்ய, 85 சதவீதம் மானியம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தில், சாயக்கழிவு சுத்திகரிக்கப்படுவதால், தினமும் 10 கோடி லிட்டர் தண்ணீர், மீண்டும் பயன்பாட்டுக்கு சுத்திகரித்து எடுக்கப்படுகிறது. கடுமையான மின் கட்டண சுமை ஏற்படுவதால், அதிகபட்ச மானியத்துடன் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

Advertisement