தலைவர் பதவியில் நீடிப்போமா?

- நமது நிருபர் -

கர்நாடகாவில் பா.ஜ.,வை ஆட்சிக்கு கொண்டு வருவதில், முக்கிய பங்கு வகித்தவர் முன்னாள் முதல்வர் எடியூரப்பா. இதனால் தான் 75 வயதை தாண்டியும் அவருக்கு முதல்வர் பதவி வழங்கி அழகு பார்த்தனர். கட்சி மேலிடம் உத்தரவால், முதல்வர் பதவியை கண்ணீருடன் ராஜினாமா செய்தார். எடியூரப்பாவை, பா.ஜ., அவமதித்தாக அவர் சார்ந்த, லிங்காயத் சமூகம் கருதியது. இதனால் கடந்த 2023 தேர்தலில் காங்கிரசை, அச்சமூகம் முழுமையாக ஆதரித்தது.

எடியூரப்பா தான், கர்நாடக பா.ஜ.,வின் முகம். அவர் இல்லாவிட்டால் எதுவும் இல்லை என்பதை உணர்ந்த கட்சி மேலிடம், எடியூரப்பாவின் 2வது மகன் விஜயேந்திராவை மாநில தலைவர் ஆக்கியது. இதன்மூலம் லிங்காயத் ஓட்டுகளை மீண்டும் கவர்ந்து விடலாம் என்று, பா.ஜ., மேலிடம் கணக்கு போட்டது.

போர்க்கொடி



ஆனால், விஜயேந்திராவுக்கு எதிராக, லிங்காயத் சமூக தலைவர்களே மாறுவர் என்று, பா.ஜ., மேலிடம் ஒரு போதும் நினைத்து பார்த்து இருக்காது. எடியூரப்பா மகனுக்கு, சொந்த சமூகத்தில் இருந்தே எதிர்ப்பு கிளம்பியது. எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் பகிரங்கமாக போர்க்கொடி துாக்கினார்.

லிங்காயத் சமூகத்தின் பா.ஜ., - எம்.எல்.ஏ., அரவிந்த் பெல்லத், ஹாவேரி பா.ஜ., - எம்.பி.,யும், முன்னாள் முதல்வருமான பசவராஜ் பொம்மை, முன்னாள் எம்.பி., சித்தேஸ்வர் உள்ளிட்டோரும், விஜயேந்திரா மீது கடுப்பில் உள்ளனர். ஆனால், அவர்கள் வெளிப்படையாக காட்டி கொள்ளவில்லை. தற்போது ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணாவும், விஜயேந்திராவின் எதிராளியாக மாறி உள்ளார்.

ஆலோசனை



தனக்கு எதிராக தொடர்ந்து பேசி வந்த, பசனகவுடா பாட்டீல் எத்னாலை கட்சி மேலிடம், பா.ஜ.,வில் இருந்து நீக்கியதால் விஜயேந்திரா சற்று நிம்மதி அடைந்தார். ஆனாலும் அவரது எதிரணி இப்போது, 'ஆக்டிவ்' ஆகி உள்ளது.

காங்கிரஸ் தலைவர்களுடன் செய்துள்ள உள் ஒப்பந்த அரசியலால் தான், லோக்சபா தேர்தலில் 25க்கு மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற முடியவில்லை. சில தொகுதிகளில் ம.ஜ.த., ஓட்டுகள் தான் பா.ஜ.,வை காப்பாற்றி உள்ளது என்றும் மேலிட தலைவர்கள் கவனத்திற்கு, அதிருப்தியாளர் குழு எடுத்து கூறியுள்ளது. இதனால், விஜயேந்திராவை மாற்றுவது குறித்து, பா.ஜ., மேலிடம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

எதிர்காலம்



கடந்த மாதம் வரை மேலிடம் தன்னை மாற்றாது என்று உறுதியாக இருந்த விஜயேந்திரா, ஊடகங்கள் முன்பு நம்பிக்கையுடன் பேசினார். ஆனால் சமீபத்தில் டில்லி சென்று வந்ததில் இருந்து, அவரது முகம் பொலிவிழந்து காணப்படுகிறது.

'கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மாநில தலைவராக நன்கு பணியாற்றி உள்ளேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இனி கட்சி மேலிடம் என்ன முடிவு எடுத்தாலும் கட்டுப்படுவேன்' என்று, அடக்கத்துடன் கூறி வருகிறார். தலைவர் பதவியில் இருந்து மாற்றப்படுவோமா என்ற கவலை அவருக்கு ஏற்பட்டு உள்ளது.

பா.ஜ., புதிய தலைவருக்கு தேர்தல் விரைவில் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. முடிந்த அளவுக்கு பதவியை தக்க வைத்து கொள்ள விஜயேந்திரா, அவரது தந்தை எடியூரப்பா மூலம் முயற்சி செய்யலாம். ஆனாலும், அதற்கு பலன் கிட்டுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Advertisement