போதை பொருள் கும்பலை கைது செய்த போலீசாருக்கு கமிஷனர் அருண் பாராட்டு

சென்னை: ஏழு பேர் கொண்ட போதைப்பொருள் கட்டதல் கும்பலை கைது செய்த, போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் மற்றும் போலீசாரை அழைத்து, கமிஷனர் அருண், வெகுமதி வழங்கி பாராட்டினார்.

சென்னை ஐ.ஓ.சி., ரயில்வே யார்டு அருகே, ஜூன் 4ல், போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் மனோஜ்குமார் தலைமையிலான போலீசார், ஆர்.கே.நகர் காவலர்களுடன் இணைந்து கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, மெத் ஆம்பெட்டமைன் போதைப் பொருளை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த, மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த அமீனா, 46 உட்பட, ஏழு பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து, 700 கிராம் மெத் ஆம்பெட்டமைன், 1 கை துப்பாக்கி, 15 தோட்டாக்கள், ஆறு மொபைல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சிறப்பாக செயல்பட்டு, போதைப் பொருள் கும்பலை கைது செய்த, போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் மனோஜ்குமார், இன்ஸ்பெக்டர்கள் ஜானி செல்லப்பா, ராஜாசிங், எஸ்.ஐ.,க்கள் பொன் பாண்டியன், ஜெயகுமார் உள்ளிட்டோரை நேற்று, போலீஸ் கமிஷனர் அருண் அழைத்து, வெகுமதி வழங்கி பாராட்டினார்.

Advertisement