உயர் அதிகாரிகளுக்கு எதிராக முதன்முறையாக போராட்டத்தில் குதித்த போலீஸ் குடும்பங்கள்!

21


மதுரை: தமிழக போலீஸ் துறையில் 'ஸ்பெஷல் டீம்' என்ற ஒரு பிரிவு இல்லாத நிலையில், அதிகாரிகள் ஒவ்வொருவரும் தங்களுக்கென ஒரு 'டீமை' உருவாக்கி விசாரித்து வருவதாலும், நெருக்கடி கொடுப்பதாலும் மட்டுமே ஒட்டுமொத்த போலீசாருக்கும் கெட்டப்பெயர் ஏற்படுகிறது என அவர்களது குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் போலீஸ் விசாரணையின்போது அஜீத்குமார் 29, இறந்தார். இதுதொடர்பாக 'ஸ்பெஷல் டீமை' சேர்ந்த 5 போலீசார் கைது செய்யப்பட்டனர். 'நெருக்கடி கொடுத்த உயர்அதிகாரிகளை விட்டுவிட்டு போலீசாரை பலிகடா ஆக்குவதா' என கைதான அவர்களின் குடும்பத்தினர் திருப்புவனம் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக போலீஸ் துறை வரலாற்றில் முதன்முறையாக, உயர்அதிகாரிகளை கண்டித்து போலீஸ் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டது அரசை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஐ.ஜி., வரை 'ஸ்பெஷல் டீம்'



சட்டம் ஒழுங்கை கவனிக்கும் இன்ஸ்பெக்டர், டி.எஸ்.பி., எஸ்.பி., ஐ.ஜி., வரையிலான அதிகாரிகள் ஒவ்வொருவரும் தங்களுக்கென ஒரு 'ஸ்பெஷல் டீமை' வைத்திருக்கின்றனர். புகாரின் முக்கியத்துவத்தை பொறுத்து 'ஸ்பெஷல் டீமில்' உள்ள போலீசார் செயல்படுவர். மற்ற சமயங்களில் பழைய ரவுடிகள், கொலையாளிகளை தேடுவதில் கவனம் செலுத்துவர். குற்றவாளியை பிடிக்கும்பட்சத்தில் அவரை 'கவனித்து' தேவையான விபரங்களை பெற்ற பிறகே ஸ்டேஷன் 'கணக்கிற்கு' கொண்டு வருவர்.

அவுட்போஸ்ட்டில் 'விசாரணை'



போலீஸ் ஸ்டேஷனில் விசாரணை கைதி ஏதாவது அசம்பாவிதத்தில் ஈடுபட்டுவிடக்கூடாது என்பதற்காக இரவில் அவரை ஸ்டேஷனில் வைத்திருக்கக்கூடாது என்ற உத்தரவு உள்ளது. இதை சட்டசபை கூட்டதொடர் நடக்கும்போது மட்டுமே போலீசார் பின்பற்றி வருகின்றனர். ஸ்டேஷனில் கண்காணிப்பு கேமரா உள்ளதால், ஏதாவது அசம்பாவிதம் நடந்து நீதிமன்றத்திற்கு பிரச்னை சென்றால் தங்களுக்கு சிக்கலாகி விடும் எனக்கருதி 'ஸ்பெஷல் டீம்' போலீசார், பெரும்பாலும் போலீஸ் அவுட்போஸ்ட், ரோந்து வாகனத்தில் குற்றவாளியை 'விசாரித்து' வருகின்றனர்.

போலீசார் பலிகடா



மேலும் 7 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெறக்கூடிய குற்றங்களை செய்தவர்களை மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். அடிதடி, தகராறு, சிறு திருட்டு போன்றவற்றில் ஈடுபட்டு கைதானவர்களை 41 ஏ சி.ஆர்.பி.சி.,ன் படி சம்மன் கொடுத்து விசாரித்து போலீசே ஜாமினில் விடுவிக்கலாம் என நீதிமன்றம் அறிவுறுத்தியது. ஆனால் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி உயர் அதிகாரிகள் இதை அனுமதிப்பதில்லை. 'ஒரு வழக்கில் குற்றவாளிகளை கைது செய்தால் உயர்அதிகாரிகள் தங்கள் பெருமையாக காட்டிக்கொள்கின்றனர். அதுவே சிக்கலாகிவிட்டால் கீழ் உள்ள போலீசாரை பலிகடாவாக்கி விடுகிறார்கள். அதிகாரிகள் நெருக்கடி கொடுப்பதால் குற்றவாளியை போலீசார் 'கவனித்து' அது சிக்கலாகும் போது ஒட்டுமொத்த போலீசாருக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்துகிறது' என போலீஸ் குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.

'ஸ்பெஷல் டீம்' கலைப்பு



போலீசார் கூறியதாவது: போலீஸ் துறையில் 'ஸ்பெஷல் டீம்' என்பது கிடையாது. கொலை, கொள்ளை நடந்தால் அப்போதைக்கு 'ஸ்பெஷல் டீம்கள்' உருவாக்கப்பட்டு ஒவ்வொரு கோணத்திலும் விசாரிக்கப்படும். குற்றவாளியை கைது செய்தபின் அந்த 'டீம்கள்' கலைக்கப்படும். இதுதான் நடைமுறை. இன்ஸ்பெக்டருக்கு மேல் உள்ள அதிகாரிகள், வழக்குகளை கண்காணிக்கவும் அறிவுரை மட்டுமே வழங்க வேண்டும். அவர்களுக்கு தனி 'டீம்' தேவை இல்லை. சிறப்பு பிரிவுகள் இருக்கும்போது இந்த 'ஸ்பெஷல் டீம்' தேவை இல்லாத ஒன்று. இவ்வாறு கூறினர்.



இந்நிலையில் திருப்புவனம் விவகாரத்திற்கு பிறகு இதுபோன்ற 'டீம்'கள் கலைக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement