சிட்டுக்குருவியின் முழு மரபணு வரைபடம் தயார்

எல்லா இடங்களிலும் கண்ணில் படும் சிட்டுக்குருவியை (Passer domesticus), விஞ்ஞானிகள் குறைவாகவே ஆராய்ந்திருக்கிறார்கள்.

அந்தக் குறையைப் போக்க, ஜெய்பூரிலுள்ள மணிபால் பல்கலை, பனாரஸ் இந்து பல்கலை மற்றும் இந்திய விலங்கியல் ஆய்வு மையம் உள்ளிட்ட பல ஆராய்ச்சியாளர்களின் கூட்டமைப்பு, அண்மையில் வீட்டு சிட்டுக்குருவியின் முழுமையான மரபணு வரைபடத்தை பதிவு செய்துள்ளனர். சிட்டுக் குருவியின் 9.22 கோடி அடிப்படை இணைகள் மற்றும் 24,152 மரபணுக்களைக் கொண்ட குருவியின் மரபணு வரைபடத்தை முழுமையாக கண்டறிந்துள்ளனர்.

குருவியின் வரைபடமாக்கப்பட்ட மரபணுக்கள், அதன் தினசரி வாழ்க்கைச் சுழற்சிகள், நோய் எதிர்ப்பு சக்தி, ஆக்சிஜன் சுவாசிப்பு ஆகியவற்றில், அவற்றின் தனித்த செயல்பாட்டைக் காட்டுகின்றன. சிட்டுக்குருவிகள் நகரங்கள், பூச்சிக்கொல்லிகள், மாசுபாடு ஆகியவற்றிலிருந்து எவ்வாறு தப்பித்தன என்பதற்கான தடயங்கள் இனி செய்யப்படும் மரபணு ஆய்வுகளில் தெரியவரும்.

சிட்டுக்குருவியின் மரபணு வரைபடம், நகரங்களில் குறைந்து வரும் பறவைகளின் எண்ணிக்கையை புரிந்துகொள்ள சூழலியலாளர்களுக்கு உதவும். இந்திய பூர்விக விலங்கினங்களின் முழு மரபணு வரைபடங்களை உருவாக்கும் முயற்சியில் இது முதல் படி. மேலும், இந்த முயற்சி, இந்தியாவில் பல்லுயிர் அறிவியல் மற்றும் மரபணு பாதுகாப்பில் திறமை கொண்டவர்கள் அதிகரித்து வருவதையும் சுட்டிக்காட்டுகிறது.

Advertisement