பள்ளிக்கரணையில் பெட்ரோல் குண்டு வீசி ரவுடியை கத்தியால் வெட்டிய 5 பேர் கைது

பள்ளிக்கரணை: பெட்ரோல் குண்டு வீசியும், ரவுடியை கத்தியால் வெட்டியும் தப்பிச்சென்ற ஐந்து பேரை, பள்ளிக்கரணை போலீசார் கைது செய்தனர்.

பள்ளிக்கரணை, பவானி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஹரிபிரசாத், 31; ரவுடி. பள்ளிக்கரணை காவல் நிலைய சரித்திர பதிவேடு, 'சி' பிரிவு குற்றவாளி.

மூன்று குண்டு



இவர், நேற்று முன்தினம் இரவு, பவானி அம்மன் கோவில் தெருவில், தன் இருசக்கர வாகனத்தில் குடி போதையில் சென்றுள்ளார்.

அப்போது, எதிரில் வந்த அதே பகுதியைச் சேர்ந்த ஜோஸ்வா சாம்சன், 23, பிரவீன் பெஞ்சமின், 34, ஆகியோர் மீது இடிப்பது போல் ஹரிபிரசாத் சென்றதால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையறிந்த ஹரிபிரசாத்தின் தாய் பழனியம்மாள், ஜோஸ்வா வீட்டிற்கு தன் மகனுடன் சென்று, நேற்று காலை தகராறு செய்துள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த ஜோஸ்வா மற்றும் அவரது நண்பர்கள் பிரவீன் பெஞ்சமின், அரவிந்த், 27, பிரசன்னா, சிவகுமார், 42, அஜித்குமார், 27, கணபதி, 21, உள்ளிட்டோர், ஹரிபிரசாத்தின் வீட்டின் வெளியே நேற்று மாலை, மூன்று பெட்ரோல் குண்டுகளை வீசினர்.

சத்தம் கேட்டு வெளியே வந்த ரவுடி ஹரிபிரசாத், அவரது நண்பர் மடிப்பாக்கத்தைச் சேர்ந்த தீபக், 28, ஆகியோரை சுற்றி வளைத்த ஜோஸ்வா தரப்பினர், அவர்களை கத்தியால் வெட்டி தப்பினர்.

சிறையில் அடைப்பு



இதில் ஹரிபிரசாத்தின் வலது கை சுண்டு விரல் மற்றும் மோதிர விரலில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டது. தீபக்கிற்கு இடது மணிக்கட்டு, முதுகு பகுதியில் வெட்டு விழுந்தது.

அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு, அதேபகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்ற பின், இச்சம்பவம் குறித்த பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இதையடுத்து, பள்ளிக்கரணையைச் சேர்ந்த பிரவீன் பெஞ்சமின், அஜித்குமார், கணபதி, அரவிந்த், சிவகுமார் ஆகிய ஐந்து பேரை, போலீசார் கைது செய்து, ஆலந்துார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். முக்கிய குற்றவாளியான ஜோஸ்வா சாம்சன், 23, உள்ளிட்ட நபர்களை தேடுகின்றனர்.

Advertisement