தி.மு.க.,வின் 'ஏ டீம்' த.வெ.க., அர்ஜுன் சம்பத் ஆவேசம்

1

தேனி: “தி.மு.க.,வின் ஏ டீம் விஜய்,” என தேனியில், ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறினார்.

அவர் கூறியதாவது:



மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாடு தமிழகத்தில் அரசியல் திருப்புமுனையை ஏற்படுத்தி இருக்கிறது. மாநாடு நடந்த அதே இடத்தில், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, முஸ்லிம் முன்னேற்ற மாநாடு நடத்தப்படும் என அறிவித்திருக்கிறார்.



இது வேண்டும் என்றே உள்நோக்கத்தோடு செய்வதாகும். இந்த மாநாட்டிற்கு தடைவிதிக்க வேண்டும்.


சிவகங்கை திருப்புவனம் அஜித்குமார், போலீசார் தாக்கி கொலையான சம்பவத்திற்கு பொறுப்பேற்று, 'ஸாரிம்மா'என முதல்வர் ஸ்டாலின், கொலையான அஜித்குமார் அம்மாவிடம் தெரிவித்துள்ளார். இப்படி ஸாரி கேட்பதற்கு பதில், பதவி விலகி இருக்கலாம்.


தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், முதல்வர் வேட்பாளர் என அக்கட்சியின் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இப்போது அனைவருக்கும் புரிந்திருக்கும். தி.மு.க.,வின் 'ஏ டீம்' விஜய் என்பது. தனித்து போட்டியிட்டு, தி.மு.க.,வுக்கு எதிரான ஓட்டுகளை பிரித்து, அக்கட்சியை மீண்டும் ஆட்சியில் அமர்த்தும் எண்ணத்துடனேயே இப்படியெல்லாம் செய்கிறார் விஜய்.


இது மக்களுக்கு நன்கு தெரிந்துள்ளது. அதனால், வரும் 2026 சட்டசபைத் தேர்தலில் தி.மு.க., மற்றும் த.வெ.க., என இரு கட்சிகளையும் மக்கள் தோற்கடிப்பர். நடிகர் விஜய் திட்டம் தவிடுபொடியாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement