தமிழகத்தில் மேலும் ஒரு கட்சி உதயம்; ஆம்ஸ்ட்ராங் மனைவி துவக்கினார்

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது மனைவி பொற்கொடி, 'தமிழ் மாநில பகுஜன் சமாஜ்' என்ற புதிய கட்சியை, நேற்று துவக்கினார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்தாண்டு ஜூலை 5ல் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து, ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடிக்கு, கட்சியின் மாநில பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டது. மாநில தலைவராக ஆனந்தன் நியமிக்கப்பட்டார்.



ஆனந்தன் செயல்பாட்டில், பொற்கொடி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிருப்தியடைந்தனர். இரு தரப்புக்கும் இடையே கோஷ்டி மோதல் இருந்தது. இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்தும் பொற்கொடி நீக்கப்பட்டதாக அறிக்கப்பட்டார்.




ஆம்ஸ்ட்ராங்கின் முதலாம் ஆண்டு நினைவு தினமான நேற்று, சென்னையை அடுத்த ஆவடி அருகே பொத்துாரில் உள்ள ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில், பொற்கொடி அஞ்சலி செலுத்தினார்.


பின், 'தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி' என்ற புதிய கட்சியை துவங்கி இருப்பதாக அறிவித்தார். அப்போது, புதிய கட்சியின் கொடியையும் அறிமுகம் செய்து வைத்தார். நீலவண்ண கொடியில், யானை ஒன்று தும்பிக்கையில் பேனாவை பிடித்திருப்பது போல், கொடி அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement