டெலிகிராமில் வேலை ஆசை காட்டி இருவரிடம் ரூ.13.71 லட்சம் பறிப்பு


கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பகுதி நேர வேலை, முதலீடு செய்தால் அதிக லாபம் எனக்கூறி இருவரிடம், 13.71 லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுங்கல், திம்மேநத்தத்தை சேர்ந்தவர் முரளி, 28; தனியார் நிறுவன ஊழியர். இவரது டெலிகிராம் பக்கத்திற்கு ஒரு மெசேஜ் வந்தது.
அதில் வீட்டிலிருந்தபடியே வேலை செய்து சம்பாதிக்கலாம். அனுப்பும் 'லிங்க்'கை 'கிளிக்' செய்து பதிலளித்தால் குறிப்பிட்ட தொகை கிடைக்கும் தெரிவித்திருந்தது. 'கிளிக்' செய்து சிறிது பணம் பெற்றார்.
மேலும் அவர்கள் அடுத்து அனுப்பிய மெசேஜில் பகுதி நேர வேலையுடன், பண முதலீடு செய்தால் முதலீட்டு தொகையுடன் லாபம் மற்றும் ஊதியம் கிடைக்கும் என கூறியுள்ளனர்.
இதையடுத்து அவர்கள் கூறிய வங்கி கணக்குகளில், 8.71 லட்சம் ரூபாய் அனுப்பினார். அதன் பின் அவரை யாரும் தொடர்பு கொள்ளவில்லை. இதேபோல் ஓசூர், மத்திகிரி ரூபிதா, 39, டெலிகிராம் பக்கத்தில் வி.வி.ஐ.பி., குழுவில் இணைந்தார்.
அதில் முதலீடு செய்த பணத்திற்கு அதிக லாபம் கிடைக்கும் என இருந்தது. அதை நம்பிய அவர், 5 லட்சம் ரூபாயை அனுப்பி ஏமாந்தார்.
இருவரின் புகார் படி, கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement