தகனமேடை அமைக்க எதிர்ப்பு பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை

கோபி, எரிவாயு தகன மேடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மக்களிடம், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதால், கோபி அருகே பரபரப்பு ஏற்பட்டது.

கோபி அருகே சாணார்பாளையம்-மோளக்கவுண்டம்பாளையத்துக்கு இடைபட்ட பகுதியில், எரிவாயு தகன மேடை அமைக்க, கொளப்பலுார் டவுன் பஞ்சாயத்து முடிவு செய்தது. அவ்வாறு அமைத்தால், மோளக்கவுண்டம்பாளையம், சாணார்பாளையம், கல்லுமடை, நஞ்சப்பன் காலனி உள்ளிட்ட ஏழு கிராமங்களின் சுற்றுச்

சூழல் பாதிக்கும், நீர்நிலைகள் மாசுபடும் என கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் எரிவாயு தகன மேடை அமைப்பது குறித்து, ஏழு கிராம மக்களுடன் கோபி தாசில்தார் சரவணன் மற்றும் சிறுவலுார் போலீசார் சாணார்பாளையத்தில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஊர்மக்கள் சார்பில், தங்களுக்கு எரிவாயு தகன மேடை வேண்டாம் என கூறி, கோபி தாசில்தார் சரவணனிடம் மனு வழங்கினர். மக்களின் கோரிக்கையை, கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.
பேச்சுவார்த்தை முடிந்த பின், அங்கிருந்த கொளப்பலுார் டவுன் பஞ்., தலைவர் அன்பரசுவை
(தி.மு.க.,) பெண்கள் சிலர் முற்றுகையிட்டு, எரிவாயு தகன மேடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

Advertisement