காவிரியில் மூழ்கி 4 மாணவிகள் பலி; இழப்பீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை : விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கச் சென்ற அரசுப் பள்ளி மாணவிகள் 4 பேர் கரூர் காவிரி ஆற்றில் மூழ்கி பலியானதற்கு தமிழக அரசு தலா ரூ.13 லட்சம் இழப்பீடு வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
திருச்சி மாவட்டத்திலுள்ள ஒரு கல்லுாரியியில் 2023 பிப்.15 ல் குடியரசு தின மாநில கால்பந்து போட்டி நடந்தது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஒரு அரசு பள்ளியில் படித்த 11 முதல் 13 வயதுள்ள 4 மாணவிகள் பங்கேற்றனர். உடன் பள்ளியின் 3 ஆசிரியர்கள் சென்றனர். பின் கரூர் மாவட்டம் மாயனுார் அருகே காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றபோது 4 மாணவிகளும் மூழ்கி இறந்தனர்.
மாணவிகளின் பெற்றோர் 4 பேர் , 'சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் கவனக்குறைவால் சம்பவம் நடந்துள்ளது. அரசு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கியது. கூடுதல் இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர், புதுக்கோட்டை கலெக்டருக்கு மனு அனுப்பினோம்.
நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் மற்றும் ஜோதிமணி எம்.பி.,உறுதி அளித்தனர். நடவடிக்கை இல்லை. போதிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்,' என மனு தாக்கல் செய்தனர்.
நீதிபதி வி.லட்சுமிநாராயணன் விசாரித்தார். மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் சகா ஆஜரானார்.
நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மாணவிகளை ஆசிரியர்கள் பாதுகாக்கத் தவறியது மிகப்பெரிய அலட்சியம் மற்றும் கடமை தவறிய செயல். போதிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் காவிரியில் இறங்க அனுமதித்துள்ளனர். சரியான கண்காணிப்பு மேற்கொண்டிருந்தால் சம்பவம் நடந்திருக்காது.
ஆசிரியர்கள் பொறுப்பான முறையில் செயல்பட்டிருக்க வேண்டும். இது ஒரு அரசு பள்ளி என்பதால், அரசே பொறுப்பேற்க வேண்டும்.
மாணவிகள் புத்திசாலித்தனமாக இருந்ததால்தான் போட்டிக்காக பள்ளியால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இச்சம்பவம் நடந்திருக்காவிடில் அவர்கள் இந்நாட்டின் வரலாற்றை அலங்கரிக்கும் பிரகாசமான நட்சத்திரங்களாக வளர்ந்திருப்பார்கள். துரதிர்ஷ்டவசமாக காவிரியில் இறந்துவிட்டனர்.
மூன்று ஆசிரியர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை விசாரணையை பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் விரைவில் முடித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மனுதாரர்கள் 4 பேருக்கும் தலா ரூ.15 லட்சம் இழப்பீடு இந்நீதிமன்றம் நிர்ணயிக்கிறது. அதில் ஏற்கனவே அரசு வழங்கிய தலா ரூ.2 லட்சத்தை கழித்துக் கொண்டு தலா ரூ.13 லட்சத்தை 7.5 சதவீத வட்டியுடன் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் வழங்க வேண்டும். மனுதாரர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் செலவு தொகையை 3 ஆசிரியர்களும் சமமாக வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.
மேலும்
-
ஓரணியில் தமிழ்நாடு பிரசாரம் துவக்கம்: மக்களை வீடு வீடாக சென்று சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின்!
-
நீதிபதி வீட்டில் பணக்குவியல்; பதவி நீக்கம் செய்வதற்காக விசாரணைக்குழு அமைக்கும் பணி துவக்கம்!
-
தமிழகத்தில் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு; கோவை, நீலகிரிக்கு மஞ்சள் அலர்ட்
-
மஞ்சள் நீராட்டு விழாவுக்கு வைத்திருந்த 200 சவரன் நகை: வீடு புகுந்து கொள்ளையடித்த கும்பல்
-
புது கணவன்களை கொல்லும் புது மனைவிகள் ; பீகாரில் மேலும் ஒரு திடுக்
-
அ.தி.மு.க., கூட்டணியில் விஜய் இணைந்தால் போட்டி கடுமையாகி விடும்: மார்க்சிஸ்ட் கணிப்பு