அ.தி.மு.க., கூட்டணியில் விஜய் இணைந்தால் போட்டி கடுமையாகி விடும்: மார்க்சிஸ்ட் கணிப்பு

14

சென்னை: 'வரும் 2026ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் விஜய் இணைந்தால் போட்டி கடுமையானதாக இருக்கும்' என்று மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் கூறி உள்ளார்.


@1brஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:


2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மற்ற கட்சிகள் என்ன நிலைப்பாடு எடுக்கிறதோ அதை பொறுத்து தான் எங்களின் (தி.மு.க., கூட்டணி) வெற்றி அமையும். நடிகர் விஜயின் திட்டம் என்ன என்பதும் இதில் அடங்கும். அவருக்கு கூடும் கூட்டம், தேர்தலில் ஓட்டுக்களாக மாறுமா? இல்லையா? என்பது யாருக்கும் தெரியாது.


அ.தி.மு.க.,- பா.ஜ., கூட்டணியில் பா.ம.க., இடம்பெற்றாலும் கூட, அது தி.மு.க.,வுக்கு சவாலானதாக இருக்காது. அதே நேரத்தில் அ.தி.மு.க., தலைமை வகிக்கும் கூட்டணியில் நடிகர் விஜய் சேர்ந்தால் தேர்தலில் போட்டி கடுமையானதாக இருக்கும்.


வரும் 2026 தேர்தலில் எங்கள் கட்சிக்கு எவ்வளவு தொகுதிகள் கிடைக்கும் என்பது பற்றி விவாதிக்க வேண்டியுள்ளது. கடந்த தேர்தல்களை விட அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதே எங்களின் விருப்பம். கடந்த முறை 6 தொகுதிகளில் களம் கண்டோம். இம்முறை அதைவிட அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று எண்ணுகிறோம்.


முன்னாள் முதல்வர் அண்ணாதுரை காலம் முதலே முதலாளிகளின் விருப்பங்களை நிறைவேற்றுகிற, பாதுகாக்கிற கட்சியாக தி.மு.க., இருக்கிறது என்பது எங்களின் பார்வை. அக்கட்சியின் அடிப்படையான குணாதிசயம் எந்த விதத்திலும் மாறவில்லை. திராவிட மாடல் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் முன் வைத்து பேசுகிறார்? எத்தனை விஷயங்களில் அது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது?


இன்றைய சமகால அரசியலில், தி.மு.க., போன்ற ஒரு வலுவான மற்றும் மதசார்பற்ற கட்சியானது தமிழகத்தில் இருந்து பா.ஜ.,வை அகற்ற தேவைப்படுகிறது. மதசார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைப்பதில் தி.மு.க., முக்கிய பங்கு வகிக்கிறது. மாநில உரிமைகளுக்காக ஸ்டாலின் எடுக்கும் அனைத்து உடனடி நடவடிக்கைகளிலும் நாங்களும் துணை நிற்கிறோம்.


கருணாநிதி,ஸ்டாலின் அரசுகளை ஒப்பிடவே முடியாது. ஸ்டாலின் இன்னும் நிறைய செய்யலாம். அதே நேரத்தில், தேர்தலின் போது அவர்கள் (தி.மு.க.,) அளித்த வாக்குறுதிகளில் இல்லாதவற்றையும் நிறைவேற்றி உள்ளனர் என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.


தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து தற்போது வரை 24 என்கவுன்ட்டர்கள் நிகழ்ந்துள்ளன. காவல்துறையில் சீர்சிருத்தம் என்பது இப்போதைக்கு மிகவும் தேவை.


போலீஸ் விசாரணையின் போது இறக்கும் இதுபோன்ற (கோவில் காவலாளி அஜித்குமார்) சம்பவங்களுக்கு தேர்தலில் தி.மு.க., நிச்சயம் பதில் சொல்ல வேண்டி இருக்கும். மனித உரிமைகள் மீறப்படுவதை என்றைக்கும் நாங்கள் ஏற்றுக் கொள்ளவே மாட்டோம்.


ஆலைகளில் (சாம்சங் ஆலை விவகாரம்) தொழிலாளர்கள் சங்கம் அமைப்பது அடிப்படை உரிமை. மாநில தொழிலாளர் நலத்துறை இதற்கு உதவி செய்ய வேண்டும். ஆனால், அதற்கே நாங்கள் சென்னை ஐகோர்ட் வரை சென்று போராட வேண்டியிருந்தது. தமிழகத்தில் ஒரு தொழிற்சங்கம் அமைப்பதற்காக, தொழிலாளர்கள் ஒரு மாபெரும் போராட்டத்தை நடத்திய வரலாறு, இதற்கு முன்னர் நடந்தது இல்லை. இது, பன்னாட்டு நிறுவனங்களுக்கு தமிழக அரசு சாதகமாக நடந்து கொள்கிறது என்பதையே இது உணர்த்துகிறது.


இவ்வாறு பெ. சண்முகம் கூறினார்.

Advertisement