கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டு கடலுக்கு செல்லும் உபரி நீர்; புதிய தடுப்பணைகள் அவசியம்

10

திருச்சி : முக்கொம்பு மேலணைக்கு, 50,899 கனஅடி நீர் வரத்து இருந்தது. இதனால், கல்லணைக்கு 24,000 கனஅடி நீரும், கொள்ளிடம் ஆற்றில் 26,000 கனஅடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டுள்ள உபரி நீர், கடலுார் வழியாக, கடலுக்கு சென்று விடும்.


மேட்டூர் அணையில் இருந்து, ஜூன் 12ம் தேதி, காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர், 14ம் தேதி திருச்சி முக்கொம்பு அணைக்கு வந்தது. மறுநாள், கல்லணையில் இருந்து, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலுார், கடலுார் மாவட்டங்களின் டெல்டா பாசனத்துக்கு, முதல்வர் ஸ்டாலினால் திறக்கப்பட்டது.


ஆரம்பத்தில் 5,000 கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக உயர்ந்து, தற்போது, முக்கொம்பு அணைக்கு நீர் வரத்து 50,000 கன அடியாக அதிகரித்துள்ளது.



காவிரியில் முக்கொம்பு அணைக்கு வரும் தண்ணீரில், 30 ஆயிரம் கன அடி வரை மட்டுமே கல்லணைக்கு திறக்கப்படும்.


உபரி நீர், முக்கொம்பில் கட்டப்பட்டுள்ள கதவணை வழியாக, கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்படும்.


அதன்படி, நேற்று முன்தினம், முக்கொம்பு மேலணைக்கு, 46,784 கனஅடி நீர் வரத்தானது. அதில், 24,410 கனஅடி கல்லணைக்கு திறக்கப்பட்டது. 22,374 கனஅடி உபரி நீர் புதிய கதவணை வழியாக, கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டது.


நேற்று முக்கொம்பு மேலணைக்கு 50,899 கனஅடி நீர் வரத்து இருந்தது. கல்லணைக்கு 24,000 கனஅடி நீரும், கொள்ளிடம் ஆற்றில் 26,000 கனஅடி நீரும், கிளை வாய்க்கால்களில் 700 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.


இது தவிர, கல்லணையில் இருந்தும், 4,000 கனஅடி நீர் கொள்ளிடத்தில் திறக்கப்பட்டுள்ளது.
கொள்ளிடம் ஆற்றில் நீர் திறப்பு அதிகரித்துள்ளதால், கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்படும் உபரி நீர் கடலுார் மாவட்டத்தை கடந்து, கடலுக்கு சென்று கலந்து விடும்.



இதனால், காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் தடுப்பணைகள் கட்டி, உபரி நீர் வீணாவதை தடுக்க வேண்டும், என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


முக்கொம்பில் உள்ள மேலணை மற்றும் கொள்ளிடம் புதிய கதவணை ஆகியவற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், காவிரி ஆறு மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீர் கரைகளை தொட்டுச் செல்கிறது.

Advertisement