மாணவர்களை ஏற்றி சென்ற வேன் மோதி ஒருவர் பலி

மயிலாடுதுறை: திருக்கடையூர் அருகே பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற வேன், பைக் மீது மோதிய விபத்தில் பெயின்டர் பலியானார்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா சர்ச் தெருவை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் மகன் ராஜா, 45, பெயின்டர். நேற்று காலை இவரும், அதே தெருவை சேர்ந்த மாசிலாமணி மகன் காபிரியல், 50, என்பவரும் பைக்கில் மயிலாடுதுறை நோக்கி சென்றனர்.

ஆனந்தமங்கலம் மெயின் ரோட்டில், எதிரே திருக்கடையூர் பகுதியில் இருந்து பொறையாரில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் தாறுமாறாக ஓடி, பைக் மீது மோதியது.

தொடர்ந்து, சாலையோர மரத்தில் மோதி நின்றது. வேனில் பயணித்த மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக காயம் இன்றி தப்பினர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த காபிரியல் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பொறையார் போலீசார், தப்பி ஓடிய வேன் டிரைவரை தேடி வருகின்றனர்.

Advertisement