போதைப்பொருள் கும்பல் தலைவன் கேரளாவில் கைது

1

திருவனந்தபுரம்: இந்தியாவில் மிகப் பெரிய போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவனாக செயல்பட்டவனை கொச்சி அருகே போலீசார் கைது செய்தனர்.

போதைப் பொருள் விற்பனையை தடுக்க கேரள போலீஸ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொச்சியில் உள்ள ஒரு தபால் நிலையத்தில் போதை பொருள் பார்சல் வந்துள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது.

தேசிய போதை பொருள் தடுப்பு துறை அதிகாரிகள் அந்த தபால் அலுவலகத்தில் விசாரணை நடத்தினர். பார்சல்களில் எல்.எஸ்.டி போதைப்பொருள் இருந்தது. இதை அனுப்பியது எர்ணாகுளம் அருகே உள்ள மூவாற்றுப்புழாவை சேர்ந்த எடிசன் என்பது தெரியவந்தது.

அவரது வீட்டுக்கு அதிகாரிகள் சென்று விசாரணை நடத்திய போது பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள எல்.எஸ்.டி.,கெட்டாமின் உள்ளிட்ட போதை பொருட்கள்பறிமுதல் செய்யப்பட்டன. எடிசன் கைது செய்யப்பட்டார். போலீசார் அவரிடம் ரகசிய இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். கெட்டாமெலோன் என்ற வலைதளத்தை உருவாக்கி ஆன்லைன் மூலம் எடிசன் போதை பொருள் விற்பனை செய்து வந்ததுள்ளார்.

சென்னை, டெல்லி, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய நகரங்களில் இவரது கும்பலை சேர்ந்தவர்கள் போதைப்பொருள் விற்பனை செய்து வருவதும் தெரிய வந்துள்ளது.

எடிசன் கைது செய்யப்பட்டதன் மூலம் நாட்டின் மிகப்பெரிய போதைப்பொருள் வலை முறிக்கப்பட்டுள்ளதாக கொச்சி தேசிய போதைப்பொருள் தடுப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement