தேர்தலில் நிற்பதை தவிர வழியில்லை; தொழில்துறையினர் அறிவிப்பு

கோவை : 'மின் கட்டண உயர்வு குறித்து, போராட்டங்கள் நடத்தியும், முதல்வர் உட்பட அனைத்து தரப்பினருக்கும் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், தொழிலை மீட்டெடுக்க, தேர்தல் அரசியலில் ஈடுபடும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம்' என, தமிழ்நாடு அனைத்து தொழில்முனைவோர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கூட்டமைப்பின் தலைவர் முத்துரத்தினம், பொதுச்செயலர் ஜெயபால் ஆகியோர், அளித்த பேட்டி:



தொழில்துறைக்கான மின் கட்டணம், 3.16 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. 2022 முதல் தற்போது வரை, 63 சதவீதம் உயர்த்தப்பட்டிருக்கிறது.


இது, தொழில்துறையை கடும் நெருக்கடிக்கு ஆளாக்குகிறது. தொழிலே செய்ய முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளோம். பிற மாநிலங்களை விட, தமிழகத்தில் மின் கட்டணம் அதிகம். மேற்கூரை சோலார் அமைத்தால், அதற்கும் 'நெட்வொர்க்' கட்டணம் வசூலிக்கப்படுகிறது.


வழக்குத் தொடர்ந்து, கோர்ட்டில் சாதகமாக தீர்ப்பு வந்தும், ஒரு நிறுவனத்தின் மீதான வழக்கைக் காட்டி, மின் வாரியம் மீண்டும் வசூலிக்கிறது. இதை எதிர்த்தும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.


பசுமை எரிசக்தியை ஊக்குவிக்காமல், 1.58 லட்சம் ரூபாய் கடனில் மூழ்கியுள்ள மின் வாரியம், அரசுக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்தி வருகிறது.


அரசியல் கட்சிகள் எங்களுக்கு ஆதரவாக இல்லை. சம்பிரதாயத்துக்காக போராட்டம் நடத்தி விட்டு, அமைதி காக்கின்றன. அதனால், நாங்களே அரசியலில் இறங்க முடிவெடுத்துள்ளோம். கடந்த லோக்சபா தேர்தலிலேயே, அனைத்து தொழில் அமைப்புகள் சார்பில், போட்டியிட முடிவு எடுத்தோம். தமிழக முதல்வர், தேர்தலுக்குப் பின் தீர்வு காண்பதாக கூறியிருந்தார்; தீர்வு எட்டப்படவே இல்லை.


எங்களது வேலை தொழில் செய்வது; அரசியல் அல்ல. எங்களின் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்காவிட்டால் வேறென்ன செய்வது. எனவே, 2026 தேர்தலில் தொழில் அமைப்புகள் சார்பில் போட்டியிடுவோம்.


அதற்குள் முதல்வர் தலையிட்டு, மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். மின்வாரியத்துக்கு ஏற்படும் இழப்பை, அரசு ஏற்க வேண்டும். தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தை, கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement