அமெரிக்கா நோக்கி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு; பயணிகள் அவதி

8


புதுடில்லி: டில்லியில் இருந்து அமெரிக்கா சென்ற ஏர் இந்தியா ட்ரீம்லைனர் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. விமானம் எரிபொருள் நிரப்புவதற்கு, வியன்னாவில் தரையிறங்கிய போது தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது.

டில்லியில் இருந்து வாஷிங்டனுக்கு நேற்று (ஜூலை 02) ஏர் இந்தியா விமானம் (ஏ.ஐ.,103) புறப்பட்டு சென்றது. விமானம் வழக்கமாக ஆஸ்திரியாவின் வியன்னாவில் எரிபொருள் நிரப்ப தரையிறக்கப்படும். இதனால் விமானம் வியன்னாவில் தரையிறக்கப்பட்டு, எரிபொருள் நிரப்பப்பட்டது. அப்போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது.



இதனால் பெரும் விபத்து நல்வாய்ப்பாக தவிர்க்கப்பட்டது. இதையடுத்து விமானத்தில் தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் தொழில்நுட்ப நிபுணர்கள் ஈடுபட்டனர். ஆனால் சரி செய்யும் முயற்சி தோல்வியில் முடிந்தது. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் வியன்னாவில் இறக்கிவிடப்பட்டனர்.


விமான சேவை ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா விமான நிர்வாகம் அறிவித்தது. பாதி வழியில் பயணிகள் அனைவரும் இறக்கிவிடப்பட்டதால் கடும் அவதி அடைந்தனர். இதையடுத்து பயணிகள் அனைவரும் மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.


கடந்த ஜூன் 12ம் தேதி ஆமதாபாத்தில் இருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியாவின் போயிங் 787 - 8 ட்ரீம் லைனர் விமானம் நொறுங்கி விழுந்தது. இதில் விமானத்தில் இருந்தவர்கள் மற்றும் தரையில் இருந்தவர்கள் உட்பட 274 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து தொடர்ந்து ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு வருவது பயணியர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement