விருத்தாசலத்தில் பதுக்கிய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் வீட்டில் பதுக்கியிருந்த 2 டன் ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் நுண்ணறிவு போலீசார் பறிமுதல் செய்து, முதியவரை கைது செய்தனர்.

விருத்தாசலத்தில் ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி, வெளி மாநிலங்களுக்கு கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், குற்ற நுண்ணறிவு தடுப்பு பிரிவு ஏட்டு ராஜசேகர், போலீஸ்காரர் மணிகண்டன் ஆகியோர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, விருத்தாசலம் ஸ்டேட் பாங்க் பின்புறம் உள்ள இந்திரா நகர், டவுன் ஜூம்மா பள்ளிவாசல் அப்பார்ட்மென்ட்டில் குடியிருக்கும் யாசின் மகன் ஷாகுல் ஹமீது, 55, என்பவர் வீட்டில், 40 கிலோ எடையுடைய 50 மூட்டைகளில் 2 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது.

தகவலறிந்த மாவட்ட குடிமைப்பொருள் நுண்ணறிவு இன்ஸ்பெக்டர் ரமேஷ்ராஜா, சப் இன்ஸ்பெக்டர் சந்தோஷ் உள்ளிட்ட போலீசார் வந்து விசாரணை நடத்தினர். அதில், விருத்தாசலம் நகரில் உள்ள ரேஷன் கடைகளில் இருந்து குறைந்த விலைக்கு அரிசியை வாங்கி, வெளிமாநிலங்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தெரிந்தது.

அதைத் தொடர்ந்து, 2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார், ஷாகுல் ஹமீதுவை கைது செய்தனர். இந்த சம்பவம், விருத்தாசலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement