சிறுமியை திருமணம் செய்தவர் மீது 'போக்சோ' வில் வழக்கு பதிவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம், தானிப்பாடியை சேர்ந்தவர் கண்ணியப்பன் மகன் மாசி, 20; இவர் கச்சிராயபாளையம் செங்கல் சூளையில் பணிபுரிந்தார். அப்போது, மாசிக்கும், அங்கு பணிபுரிந்த 16 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 2022ம் ஆண்டு ஆக., மாதம், செங்கல் சூளையில் வேலை செய்த அச்சிறுமியை மாசி திருமணம் செய்து கொண்டனர்.

கர்ப்பமடைந்த சிறுமிக்கு, கடந்த 2024ம் ஆண்டு அக்., மாதம் சேலம் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து, சிறுமியும், குழந்தையும் கருவுற்றோர் சிறுமியர் இல்லத்தில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து சேலம் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் சென்றது.

கள்ளக்குறிச்சி ஊர் நல அலுவலர் தமிழ்செல்வி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் மாசி மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement