அரசு மருத்துவமனையில் டாக்டர்கள்... பற்றாக்குறை; கிராமப்புற நோயாளிகள் கடும் அவதி

விருத்தாசலம் : விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை காரணமாக கிராமப்புற நோயாளிகள்மிகுந்த சிரமமடைகின்றனர்.
விருத்தாசலம் அரசு பொது மருத்துவமனையில் பொது, மகப்பேறு, காது மூக்கு தொண்டை, பல், முடநீக்கியல், கண் மற்றும் சித்தா பிரிவுகளில் தினசரி 1,500 பேர் புறநோயாளிகளாகவும், 250க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர்.
இங்கு, 1.80 கோடி ரூபாயில் அதிநவீன சிடி ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே, இ.சி.ஜி., மற்றும் டயாலிசிஸ் இயந்திரங்கள் மூலம் சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தம் சுத்திகரிப்பு, சிறுநீர், ரத்த பரிசோதனை வசதிகள் உள்ளது. மேலும், தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக முதல்வர் காப்பீடு திட்டத்தில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
டாக்டர்கள், செவிலியர்களுக்கு உறுதுணையாக சுமீட் என்ற தனியார் நிறுவன பணியாளர்கள் மூலம் பாதுகாப்பு மற்றும் துப்புரவு பணி மேற்கொள்ளப்படுவதால், மருத்துவமனை வளாகம் துாய்மையாக பராமரிக்கப்படுகிறது. இருப்பினும் கூடுதல் கட்டட வசதியின்றி நோயாளிகள், மருத்துவ ஊழியர்கள் சிரமமடைந்து வருகின்றனர்.
இதனை சுட்டிக்காட்டி, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானதும், 2 ஆண்டுகளுக்கு முன் 1.50 கோடி ரூபாயில் கண் மருத்துவ பிரிவுக்கு கூடுதலாக புதிய கட்டடம் கட்டப்பட்டது.
தற்போது, 5 கோடி ரூபாயில், லிப்ட் வசதியுடன் கூடிய ஐந்து அடுக்குமாடி கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.
இதில், பார்க்கிங், டயாலிசிஸ், முடநீக்கியல் பிரிவில் அறுவை சிகிச்சைக்கு பின் கவனிப்பு
வார்டு, அறுவை அரங்குகள், ரத்த வங்கி செயல்பட உள்ளன. மேலும், கனிம வள நிதியின் கீழ் 4.4 கோடி ரூபாயில், ஏற்கனவே உள்ள 24 மணி நேர அவசர சிகிச்சை கட்டடத்தின் மேல் பகுதியில் ஒரு தளமும், அதனருகே உள்ள தீவிர இருதய சிகிச்சை பிரிவு கட்டடத்தின் மேல்புறம் இரண்டு தளங்களும் கட்டப்பட்டுள்ளது.
இதன் மூலம் 400 முதல் 500 நோயாளிகள் வரை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு நிகராக தங்கி சிகிச்சை பெற முடியும். ஆனால், போதிய மருத்துவர்கள் இல்லாததால் மருத்துவர்கள், நோயாளிகள் மிகுந்த சிரமமடைந்து வருகின்றனர். இதனால் நோயாளிகளுடன் வரும் உறவினர்களுடன் வாக்குவாதம் ஏற்படுகிறது.
டாக்டர், செவிலியர்கள் பற்றாக்குறை
தினசரி நடக்கும் 10 பிரசவங்களில் 6 அறுவை சிகிச்சை மூலம் நடக்கிறது. அதுபோல், முடநீக்கியல் பிரிவில் தண்டுவடம், மூட்டு மாற்று உட்பட மாதந்தோறும் 45 அறுவை சிகிச்சைகளும், கண் புரை நீக்கம் மற்றும் டயாலிசிஸ் பிரிவில் தினசரி 20 பேர் என சிகிச்சை தரப்படுகிறது.
ஆனால், 2000ம் ஆண்டில் பணிபுரிந்த எண்ணிக்கை அடிப்படையிலேயே மருத்துவர், செவிலியர்கள் பணிபுரிகின்றனர்.
இந்திய பொது சுகாதார தரநிலைகள் (ஐ.பி.ெஹச்.எஸ்.,) மூலம் வடிவமைக்கப்பட்ட அளவுகோளின் படி, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், அறுவை சிகிச்சைகள் எண்ணிக்கையின்படி, தற்போது பணியில் உள்ள 27 மருத்துவர்களுக்கு பதிலாக 56 பேர் பணிபுரிய வேண்டும். 70 செவிலியர்கள் மற்றும் சுமீட் பணியாளர்கள் 30 பேர் உள்ளனர். அவர்கள் இருமடங்கு எண்ணிக்கையில் பணிபுரிய வேண்டும்.
அரசு மருத்துவமனையில் 2005ல் சீமாங் சிகிச்சை பிரிவு துவங்கப்பட்டது. பொதுவாக சீமாங் பிரிவில் 4 மகப்பேறு டாக்டர்கள், 2 குழந்தைகள் நலன், 2 மயக்க மருந்து டாக்டர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், தற்போது பணியில் உள்ள மருத்துவர்களே அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். அதுபோல், சிடி ஸ்கேன் பிரிவில் ஒரு ரேடியாலஜி மருத்துவர் பணிபுரிவதால், வழக்கமான பணிகளில் தொய்வு ஏற்படுகிறது.
டாய் திட்டத்தில் அவசர சிகிச்சை
இங்கு, 24 மணி நேர சிகிச்சைக்கு 'டாய்' திட்டத்தின் கீழ் 1.50 கோடி ரூபாய் நிதியில் விபத்து, எலும்பு முறிவு மற்றும் மாரடைப்பு போன்ற அவசர சிகிச்சை வழங்கப்படுகிறது. அதிநவீன கருவிகள் மூலம் நோயாளிகளுக்கு துரிதமாக அறுவை சிகிச்சை, ரத்த குழாய் அடைப்பு நீக்குதல் போன்ற மருத்துவ சேவைகளும் கிடைக்கிறது.
ஆனால், பணியில் உள்ள மருத்துவர்களே இப்பணியில் ஈடுபடுவதால் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
எனவே, 200க்கும் மேற்பட்ட கிராம மக்களின் நலன் கருதி விருத்தாசலம் அரசு பொது மருத்துவமனையில் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் சுமீட் பணியாளர்களின் எண்ணிக்கையை இருமடங்காக உயர்த்த வேண்டும். இது தொடர்பாக அமைச்சர் கணேசன் தனிக்கவனம் செலுத்தி மருத்துவ பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
போலீஸ் பாதுகாப்பு
விபத்து, விஷம் அருந்தியது, நெஞ்சுவலி ஆகிய நோயாளிகளுடன் வரும் உறவினர்கள், மருத்துவ சிகிச்சை துரிதமாக கிடைக்காததால் ஆத்திரமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.
அப்போது மருத்துவ உபகரணங்களை சேதப்படுத்தி, மருத்துவ ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. எனவே, 24 மணி நேரமும் சீருடை அணிந்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும்.
மேலும்
-
ஓரணியில் தமிழ்நாடு பிரசாரம் துவக்கம்: மக்களை வீடு வீடாக சென்று சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின்!
-
நீதிபதி வீட்டில் பணக்குவியல்; பதவி நீக்கம் செய்வதற்காக விசாரணைக்குழு அமைக்கும் பணி துவக்கம்!
-
தமிழகத்தில் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு; கோவை, நீலகிரிக்கு மஞ்சள் அலர்ட்
-
மஞ்சள் நீராட்டு விழாவுக்கு வைத்திருந்த 200 சவரன் நகை: வீடு புகுந்து கொள்ளையடித்த கும்பல்
-
புது கணவன்களை கொல்லும் புது மனைவிகள் ; பீகாரில் மேலும் ஒரு திடுக்
-
அ.தி.மு.க., கூட்டணியில் விஜய் இணைந்தால் போட்டி கடுமையாகி விடும்: மார்க்சிஸ்ட் கணிப்பு