அஜித்குமார் கொலை வழக்கு; வீடியோ எடுத்தவருக்கு போலீஸ் பாதுகாப்பு

திருப்புவனம்:சிவகங்கையில் போலீசார் தாக்கியதில் அஜித்குமார் என்ற இளைஞர் உயிரிழந்த வழக்கில், முக்கிய சாட்சியான சக்தீஸ்வரனுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சுழற்சி முறையில் 24 மணி நேரம் இரண்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
திருப்புவனத்தில், நகைகள் திருடுபோன புகாரின் பேரில் அஜித்குமார் என்ற வாலிபர் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது போலீசார் தாக்கியதில் அவர் உயிரிழந்த விவகாரம், தமிழக அரசுக்கு பெரும் தலைவலியாக மாறியது. இதில், எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும், போலீசாரையும், தமிழக அரசையும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இதையடுத்து, சிவகங்கை போலீஸ் எஸ்.பி.,யை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியும், மானாமதுரை டி.எஸ்.பி.,யை சஸ்பெண்ட் செய்தும், குற்றம் சாட்டப்பட்ட போலீசாரை கைது செய்தும், அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. வழக்கும் சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.


இந்த நிலையில், அஜித் குமாரை போலீசார் தாக்கிய வீடியோ எடுத்த சக்தீஸ்வரன் தனக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி டி.ஜி.பி.,க்கு இமெயில் மூலம் கடிதம் எழுதியுள்ளார். ரவுடிகளுடன் தொடர்பிலுள்ள காவலர்கள், தன்னை மிரட்டிய நிலையில் தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று தமிழக டி.ஜி.பி., சங்கர் ஜிவாலுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. சுழற்சி முறையில் 2 போலீசார், பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அவரது வீட்டு வாசலில் இரண்டு சிவகங்கை மாவட்ட போலீசார் நிறுத்தப்பட்டுள்ளார். வெளிமாவட்ட போலீஸ் பாதுகாப்பு கேட்டுள்ள நிலையில் அவர்கள் ( ராமநாதபுர மாவட்ட) போலீசார் வரும் வரை இவர்கள் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள் . 24 மணி நேர பாதுகாப்பு பணி என உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு ஆயுதப்படை போலீசார், ஒரு உள்ளூர் போலீசார் பணியில் உள்ளனர். மடப்புரம் கோவில் உதவி கமிஷனர் அலுவலகத்திலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.









