காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் பாலஸ்தீனியர்கள் 82 பேர் பலி

ஜெருசலேம்: காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் பாலஸ்தீனர்கள் 82 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும்-, பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே 21 மாதங்களாக போர் நீடித்து வருகிறது.
இதனை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அவர் நேற்று, ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு மீதான, 60 நாள் போர் நிறுத்த நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறியிருந்தார்.
எனினும் இந்த நிபந்தனைகளை ஹமாஸ் அமைப்பினர் ஒப்புக்கொள்ளவில்லை. அதே நேரம்,
போரை முழுமையாக முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியை ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளோம் என ஹமாஸ் அமைப்பு கூறி இருந்தது. இந்நிலையில் காசாவில் பல்வேறு இடங்களில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.
அதிபர் டிரம்பின் கோரிக்கையை கருத்தில் கொள்ளாமல், காசாவில் பல்வேறு இடங்களில் இஸ்ரேல் படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் பாலஸ்தீனர்கள் 82 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து இஸ்ரேல் படையினர் தாக்குதல் நடத்தி வருவதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.




