கார் விபத்தில் போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா பலி: திருமணமாகி 2 வாரத்தில் சோகம்!

ஜமோரா:லிவர்பூல் மற்றும் போர்ச்சுகல் வீரர் டியோகோ ஜோட்டா 28, ஸ்பெயினில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். அவருடன் சென்ற அவரது சகோதரர் ஆண்ட்ரே 26, வும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

டியோகோ ஜோட்டா,2020 இல் வோல்வ்ஸிலிருந்து லிவர்பூலில் சேர்ந்தார் அந்த கிளப்பிற்காக 182 போட்டிகளில் 65 கோல்களை அடித்தார். அவர் பிரீமியர் லீக் பட்டத்தையும், லிவர்பூலுடன் எப்.ஏ., கோப்பை மற்றும் லீக் கோப்பையையும், 2018 இல் வுல்வ்ஸுடன் சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வென்றார், மேலும் போர்ச்சுகலுடன் இரண்டு முறை யு.இ.எப்.ஏ., நேஷன்ஸ் லீக்கை வென்றார்.இரண்டு வாரங்களுக்கு முன்பு தனது நீண்டகால தோழியான ரூட் கார்டோசோவை மணந்தார். இந்நிலையில் ஸ்பெயினில் நடந்த கார் விபத்தில் டியோகோ ஜோட்டா உயிரிழந்தார்.

ஜமோரா போக்குவரத்து போலீசார் கூறியதாவது:

செர்னாடில்லா நகராட்சியில் நள்ளிரவுக்குப் பிறகு ஒரு வாகனம் நெடுஞ்சாலையில் இருந்து விலகி தீப்பிடித்து எரிந்ததாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.அதை தொடர்ந்து ஜமோரா மாகாண கவுன்சில் தீயணைப்பு படை மற்றும் சசில் அவசர ஒருங்கிணைப்பு மையம் ஆகியவற்றிற்கு தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சுகாதார மையத்திலிருந்து மருத்துவ அவசர பிரிவு மற்றும் மருத்துவ ஊழியர்கள் அனுப்பப்பட்டனர். சம்பவ இடத்திற்கு சென்ற அவர்கள், இருவர் உயிரிழந்ததை உறுதி செய்தனர். அதை தொடர்ந்து உயிரிழந்தவர்கள் கால்பந்து வீரர்களான டியோகோ ஜோட்டா மற்றும் அவரது சகோதர் ஆண்ட்ரே என தெரியவந்தது.

இவ்வாறு போலீசார் கூறினர்.

Advertisement