தலாய் லாமாவால் மட்டுமே வாரிசை தேர்வு செய்ய முடியும்; சீனாவின் எதிர்ப்புக்கு இந்தியா பதிலடி

2

புதுடில்லி: தன்னுடைய வாரிசை புத்த மதத் தலைவர் தலாய் லாமாவினால் மட்டுமே தேர்வு செய்ய முடியும் என்று சீனாவுக்கு இந்தியா பதிலளித்துள்ளது.


திபெத் புத்த மதத் தலைவராக இருப்பவர் 14வது தலாய் லாமா. இவர் சீனாவின் அச்சுறுத்தல் காரணமாக சிறு வயதிலேயே இந்தியாவில் அரசியல் தஞ்சம் புகுந்து விட்டார். தற்போது, அவர் வரும் 6ம் தேதி 90வது வயதை எட்டுகிறார். இதையொட்டி, தலாய் லாமா தனது வாரிசை அறிவிக்க இருப்பதாக அறிவித்து இருந்தார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், "தலாய் லாமாவின் மறுபிறவியை தன்னுடைய 'காடன் போட்ராங்' அறக்கட்டளை தான் தேர்வு செய்யும். தனக்குப் பிறகும் இந்த அறக்கட்டளை தொடர்ந்து செயல்படும். இந்த விவகாரத்தில் தலையிட வேறு யாருக்கும் உரிமை இல்லை," என்று குறிப்பிட்டிருந்தார்.


தலாய் லாமாவின் இந்த அறிவிப்புக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறுகையில், " புதிதாக தேர்வு செய்யப்படும் தலாய் லாமாவை அங்கீகரிப்பதில் சீன அரசின் ஒப்புதலை பெற்று கொள்கைகளை பின்பற்ற வேண்டும்," என்று கூறினார்.


இந்த நிலையில், தன்னுடைய வாரிசை புத்த மதத் தலைவர் தலாய் லாமாவினால் மட்டுமே தேர்வு செய்ய முடியும் என்று சீனாவுக்கு இந்தியா பதிலளித்துள்ளது.


இது குறித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வெளியிட்ட அறிக்கை; தலாய் லாமாவின் முடிவு திபெத்தியர்களுக்கு மட்டுமல்ல. உலகம் முழுவதும் அவரை பின்பற்றுபவர்களுக்கும் மிகவும் முக்கியமானது. அவரது வாரிசை தீர்மானிக்கும் உரிமை தலாய் லாமாவுக்கே முழுமையாக உள்ளது. இது முற்றிலும் மத நிகழ்வு," எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement