விசாரணைக்கைதி மீது தாக்குதல்: இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., உட்பட 5 பேர் இடமாற்றம்

8


தேனி: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் கோயில் காவலாளி அஜித்குமாரை போலீசார் தாக்கிய வீடியோ பரவியது போல், தேனி மாவட்டம், தேவதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் விசாரணைக்கு அழைத்து வந்தவரை போலீசார் தாக்கும் வீடியோ பரவியது. இதில் தொடர்புடைய இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., உட்பட 5 பேரை ஆயுதப்படைக்கு மாற்றி தேனி எஸ்.பி., சிவபிரசாத் உத்தரவிட்டுள்ளார்.


தேவதானப்பட்டி ஆட்டோ டிரைவர் ரமேஷ் 31. ஜன.,14ல் மது போதையில் மக்களை அச்சுறுத்தும் வகையில் மிரட்டி போக்குவரத்திற்கு இடையூறு செய்தார். இச்சம்பவம் குறித்து பொது மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு சென்ற போலீசார்,ரமேஷை ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர். எஸ்.ஐ., மணிகண்டன் வழக்குப் பதிவு செய்து கண்டித்து ஸ்டேஷன் ஜாமினில் விடுவித்தார்.

இந்நிலையில் கெங்குவார்பட்டி வழக்கறிஞர் பாண்டியராஜன், நிலப்பிரச்னை வழக்கில் தனது தரப்பினருக்காக தேவதானப்பட்டி ஸ்டேஷனுக்கு ஜன.,14 சென்றார். தான் ஸ்டேஷனுக்கு வந்து சென்ற வீடியோ பதிவுகளை வழங்க கோரி மார்ச் மாதம் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விண்ணப்பித்தார். அதன்படி பாண்டியராஜன் ஜன.,14ல் ஸ்டேஷனுக்கு வந்து சென்ற வீடியோ பதிவுகளை இன்ஸ்பெக்டர் அபுதல்ஹா வழங்கினார்.


அதிர்ச்சி வீடியோ



அதில் ஜன.,14ல் ஸ்டேஷனுக்கு அழைத்து வரப்பட்ட ரமேஷை, எஸ்.ஐ., சுயசம்பு, ஏட்டுக்கள் மாரிச்சாமி, பாண்டி, போலீஸ்காரர் வாலிராஜன் தாக்கும் காட்சிகள் இருந்தன. இந்நிலையில் திருப்புவனம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் போலீசாரால் தாக்கப்பட்ட வீடியோ சமீபத்தில் வெளியானது. அதை பார்த்த வழக்கறிஞர் பாண்டியராஜன் தனக்கு இன்ஸ்பெக்டர் அபுதல்ஹா வழங்கிய வீடியோ பதிவை சமூக ஊடகங்களில் வெளியிட்டார்.




வீடியோ குறித்து தேனி எஸ்.பி., சிவபிரசாத் கூறியதாவது: ஜன.,14ல் மதியம் 12:00 மணிக்கு பொது மக்களுக்கு இடையூறு செய்த ரமேஷ் தேவதானபட்டி ஸ்டேஷனுக்கு அழைத்து செல்லப்பட்டு விசாரணை முடிந்து ஸ்டேஷன் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு காயங்கள் ஏற்படவில்லை. அதே ஸ்டேஷனில் மற்றொரு நில பிரச்னை வழக்கில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் வழக்கறிஞர் பாண்டியராஜன் கோரிய வீடியோவை இன்ஸ்பெக்டர் அபுதல்ஹா கொடுத்துள்ளார்.


அதில் ரமேஷை போலீசார் தாக்கிய வீடியோ பதிவு இருந்தது இன்ஸ்பெக்டருக்கு தெரியாது. அந்த வீடியோ பதிவில் வழக்கறிஞர் கேட்ட விபரங்களும், ரமேஷை போலீசார் தாக்கும் காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. அதனை பாண்டியராஜன் சமூக வெளியில் வெளியிட்டுள்ளார்.



ரமேஷ் மீது போலீசார் பலப்பிரயோகம் செய்தது தெரியவந்துள்ளது. இதனால் ஏ.டி.எஸ்.பி., ஜெரால்டு அலெக்ஸ்சாண்டர் தலைமையில் விசாரணை நடத்தி அறிக்கை வழங்கவும்.
வீடியோ பதிவின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் அபுதல்ஹா, சிறப்பு எஸ்.ஐ., சுயசம்பு,ஏட்டுக்கள் மாரிச்சாமி, பாண்டி, போலீஸ்காரர் வாலிராஜன் ஆகிய 5 பேரை ஆயுதபடைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளேன். விசாரணைக்கு பின் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Advertisement