மாஜி அமைச்சரின் பினாமி வீட்டில் பல கோடி ரூபாய் கொள்ளை; கணக்கில் காண்பித்ததோ ரூ.44 லட்சம்; டிரைவர் உட்பட 4 பேர் கைது!

மதுரை: மதுரையில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரின் பினாமி வீட்டில் ரூ.பல கோடி கொள்ளை போன வழக்கில் கார் டிரைவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் ரூ.44 லட்சம் திருடு போனதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தேர்தல் செலவுக்காக அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஒருவர் தனது பினாமியிடம் ரூ.பல கோடி கொடுத்து வைத்திருந்தார். இந்நிலையில் ஜூன் 21ல் மதுரை விளாங்குடி அபார்ட்மென்ட் வீடு ஒன்றில் ரூ.17 கோடி கொள்ளை போனது. இது முன்னாள் அமைச்சரின் பினாமி வீடு என தகவல் பரவியது.
முன்னாள் அமைச்சர், ஆளுங்கட்சியின் உச்ச அதிகாரம் படைத்தவரிடம் தகவல் தெரிவிக்க, கொள்ளை போன வீட்டின் உரிமையாளர் ஜெயந்திரன் 45, என்பவரிடம் புகார் பெற்று போலீசார் ரகசியமாக விசாரணையை துவக்கினர்.
எப்.ஐ.ஆரில் இருப்பது என்ன
இது தொடர்பாக கே.கே.நகர் பிரகாஷ் 35, நாகமலை புதுக்கோட்டை விவேகானந்த் 34, திருப்பாலை யோகேஷ் 36, பொதும்பு சுரேஷ் 49, ஆகியோரை கூடல்புதுார் போலீசார் கைது செய்து கொள்ளை போன பணத்தின் பெரும்பகுதியை மீட்டனர். ஆனால் முதல் தகவல் அறிக்கையில் ரூ.44 லட்சம் கொள்ளை போனதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஜெயந்திரன் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதில் தெரிவித்துள்ளது: நான் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக உள்ளேன். எனது 16 வயது மகனின் சிகிச்சைக்காகவும், பணி நிமித்தமாகவும் மதுரையில் வசித்து வருகிறேன். எனது சொந்த ஊரான தேனி மாவட்டம் போடி பத்ரகாளியம்மன் கோயில் திருவிழாவிற்காக குடும்பத்துடன் ஜூன் 17ல் சென்றுவிட்டு ஜூன் 21ல் திரும்பினேன். வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பேக்கில் எனது சொத்துக்களை விற்ற வகையில் கிடைத்த ரூ.44 லட்சத்தை காணவில்லை. வீட்டில் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் ஜூன் 23ல் புகார் கொடுக்க நேரில் வந்தேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மாஜியின் கார் டிரைவர்
போலீசார் கூறியதாவது: இவ்வழக்கில் கைதான சுரேஷ், முன்னாள் அமைச்சரின் கார் டிரைவர். இவரது நண்பர் யோகேஷிடம் அடிக்கடி அபார்ட்மென்ட்டிற்கு பணம் விஷயமாக மாஜி சென்று வருவதை தெரிவித்துள்ளார். அது கணக்கில் வராத பணம் என்பதால் கொள்ளையடித்தால் வெளியே தெரியாது என முடிவு செய்து திட்டம் வகுத்தனர்.
இவர்களுடன் நண்பர்கள் பிரகாஷ், விவேகானந்த் சேர்ந்து கொண்டனர். நேரம் பார்த்து கொள்ளை அடிக்க வேண்டும் என்பதற்காக, அந்த அபார்ட்மென்ட்டிலேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து ஒரு மாதத்திற்கும் மேலாக தங்கி நோட்டமிட்டனர். மாஜியின் பினாமி குடும்பத்துடன் வெளியூர் சென்ற நிலையில் பணத்தை கொள்ளையடித்தனர்.
எங்களின் தொடர் தேடுதலில் 4 பேரும் அடுத்தடுத்து சிக்கினர். அவர்கள் குறிப்பிட்ட இடத்தில் பதுக்கி வைத்திருந்த ரூ.பல கோடியை மீட்டோம். இவ்வாறு கூறினர். பணம் மீட்கப்பட்ட பிறகே முன்னாள் அமைச்சர் பொது நிகழ்ச்சியில் உற்சாகமாக பங்கேற்று வருகிறார். பணம் கொள்ளை போனது குறித்து நிருபர்கள் கேட்டால் 'என்னை ஓட்டாதீங்கப்பா' என ஜாலியாக கிண்டல் செய்து வருகிறார்.












மேலும்
-
காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் பாலஸ்தீனியர்கள் 82 பேர் பலி
-
ஹேக் ஆனது மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் சமூக வலைதளம்
-
கார் விபத்தில் போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா பலி: திருமணமாகி 2 வாரத்தில் சோகம்!
-
அஜித்குமார் கொலை வழக்கு; வீடியோ எடுத்தவருக்கு போலீஸ் பாதுகாப்பு
-
போலீசாரை கட்டுப்படுத்த முடியவில்லை என்பது வெட்கக்கேடு; முதல்வரை கடுமையாக சாடிய சீமான்!
-
தேர்தல் முடிந்த பிறகு குழந்தைகளை போல் அழக்கூடாது: 'இண்டி' கூட்டணியை கிண்டல் செய்யும் ஓவைசி