கல்லுாரி மாணவரை தாக்கிய போலீஸ்காரர் மீது வழக்கு

1

துாத்துக்குடி: ஏரல் அருகே கல்லுாரி மாணவரை தாக்கி, மிரட்டல் விடுத்த போலீஸ்காரர் மீது, மூன்று பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிந்தனர்.

துாத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே வடக்கு கோட்டூர் அம்மன்கோயில் தெருவைச் சேர்ந்தவர் அக்னிமுத்து, 51. மின்வாரிய அலுவலகத்தில் வேலை பார்க்கிறார். இவரது மகன் முத்து மதன், 20, துாத்துக்குடி முத்தையாபுரத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் படிக்கிறார்.

கடந்த, 30ம் தேதி இரவு கல்லுாரி சென்று திரும்பிய முத்துமதனை, ஏரலில் இருந்து பைக்கில் அழைத்துகொண்டு அக்னிமுத்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த போலீஸ்காரர் அஜ்மீர் காஜாமைதீன், 34, என்பவர் ஓட்டி வந்த பைக் மீது மோதும் சூழல் ஏற்பட்டது.

அதுதொடர்பாக, அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில், திடீரென மாணவர் முத்துமதனை கீழே தள்ளி, அஜ்மீர் கம்பால் தாக்கினார். தடுக்க முயன்ற அக்னிமுத்துவையும் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார்.

அக்னிமுத்து புகாரில், ஏரல் போலீசார், அஜ்மீர் காஜாமைதீன் மீது மூன்று பிரிவுகளின் கீழ், வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். காயமடைந்த முத்துமதன், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இதற்கிடையே, தந்தையும், மகனும் தாக்கியதாக, அஜ்மீர் காஜாமைதீன் துாத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

Advertisement