அரசு நிர்வாகம் தேங்கிய குட்டையைப் போல முடங்கி விடும்; தி.மு.க., அரசை எச்சரிக்கும் அன்புமணி

சென்னை: பள்ளிக்கல்வித்துறை, வணிகவரித் துறை பதவி உயர்வின் மூலம் நிரப்பப்பட வேண்டிய காலியிடங்கள் அனைத்தையும் உரிய நடைமுறைகளை பின்பற்றி நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பா.ம.க., செயல் தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை; தமிழக அரசின் இரு முக்கியத் துறைகளான பள்ளிக்கல்வித்துறை, வணிகவரித் துறை ஆகியவற்றில் பதவி உயர்வின் மூலம் நிரப்பப்பட வேண்டிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் பல மாதங்களாக காலியாக இருக்கும் நிலையில், அவற்றை நிரப்பவும், தகுதியான அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கவும் தமிழக அரசு மறுத்து வருவது கண்டிக்கத்தக்கது.
தமிழக அரசுக்கு வருவாய் ஈட்டித் தரும் முதன்மைத் துறை வணிகவரித்துறை ஆகும். அத்துறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு ஆண்டு தோறும் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக வணிகவரி அலுவலர், உதவி ஆணையர் பணியிடங்கள் கடந்த சில ஆண்டுகளாக பதவி உயர்வின் மூலம் நிரப்பப்படாததால் 200க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. அப்பணியிடங்களுக்கான பதவி உயர்வுப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ள நிலையிலும் கூட, அதை செயல்படுத்த அரசு தயாராக இல்லை. அதனால், அத்துறையில் வரி வசூல் பாதிக்கப்படுவதுடன், பணியில் உள்ள அதிகாரிகளுக்கு தேவையற்ற பணிச்சுமையும் ஏற்படுகிறது.
அதேபோல், பள்ளிக்கல்வித் துறையில் ஆசிரியர்களில் தொடங்கி முதன்மைக் கல்வி அலுவலர் வரையிலான ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. 15க்கும் மேற்பட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், 29 மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியிடங்கள் பதவி உயர்வின் மூலம் நிரப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பல மாதங்களாக இந்த பணியிடங்கள் நிரப்பப்படாததால் உயர்நிலைப்பள்ளிகளிலும், மாவட்ட அளவிலான கல்வி கட்டமைப்பிலும் நிர்வாகப் பணிகள் முடங்கிக் கிடக்கின்றன.
பள்ளிக்கல்வித்துறை தான் இளைய தலைமுறையினரின் முன்னேற்றத்திற்கு அடித்தளம் அமைக்கும் துறையாகும். ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறையில் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. இத்தகைய சூழலில் தலைமை ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்படாமல் காலியாக கிடந்தால் பள்ளிகளின் செயல்பாடுகள் முடங்கி விடும். குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும். அப்படிப்பட்ட நிலை ஏற்படுவதைத் தான் திராவிட மாடல் அரசு விரும்புகிறதா? என்பது தெரியவில்லை.
அரசின் அனைத்துத் துறையின் செயல்பாடுகளும் தெளிந்த நீரோடையைப் போல சீராக ஓடிக் கொண்டிருக்க வேண்டும். அதற்கு அனைத்துத் துறைகளிலும் போதிய பணியாளர்கள் தேவை. இல்லாவிட்டால் அரசு நிர்வாகம் தேங்கிய குட்டையைப் போல முடங்கி விடும். எனவே, பள்ளிக்கல்வித்துறை, வணிகவரித் துறை பதவி உயர்வின் மூலம் நிரப்பப்பட வேண்டிய காலியிடங்கள் அனைத்தையும் உரிய நடைமுறைகளை பின்பற்றி நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்
-
அஜித் குமார் மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள் : தமிழக அரசுக்கு நயினார் நகேந்திரன் கேள்வி
-
தலாய் லாமாவால் மட்டுமே வாரிசை தேர்வு செய்ய முடியும்; சீனாவின் எதிர்ப்புக்கு இந்தியா பதிலடி
-
ஜூலை 19ல் அனைத்துக்கட்சி கூட்டம்: எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு அழைப்பு
-
திருவனந்தபுரத்தில் பழுதாகி 20 நாட்களாக நிற்கும் பிரிட்டீஷ் போர் விமானம்: சரக்கு விமானத்தில் கொண்டு செல்ல முடிவு
-
போலீஸ் விசாரணையில் இளைஞர் உயிரிழந்த விவகாரம்; மனித உரிமை ஆணையம் விசாரணை
-
முதல்வர் சித்தராமையா அறைய முயன்ற காவல் அதிகாரி விருப்ப ஓய்வு; பா.ஜ., கடும் விமர்சனம்