கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவன் கடத்தி கொலை: 50 அடி பள்ளத்தில் சடலம் வீச்சு

4

அஞ்செட்டி: அஞ்செட்டி அருகே பள்ளி மாணவனை காரில் கடத்தி சென்ற இருவர் கொலை செய்து சடலத்தை 50 அடி பள்ளத்தில் வீசினர்.


கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே மாவனட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவராஜ், 45, கூலித்தொழிலாளி. இவரது இளைய மகன் அப்பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 8 ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாணவன் உடல் நலம் சரியில்லை என கூறி பள்ளி செல்லவில்லை.

இந்நிலையில் மாலை, 4:00 மணி அளவில் அப்பகுதியில் உள்ள நண்பர்கள் சிலருடன் கிரிக்கெட் விளையாட சென்றார், இரவு வெகுநேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. தனது மகன் கடத்தப்பட்டதை அறிந்த பெற்றோர் அஞ்செட்டி போலீசில் புகார் செய்தனர். ஆனால் போலீசார் விரைவாக நடவடிக்கை எடுக்காததால் காலை அஞ்செட்டி பஸ் ஸ்டாண்டில் மாணவன் .உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை பார்வையிட்ட போது மர்ம நபர்கள் மாணவனை கடத்தி சென்றது தெரிந்தது.


இந்நிலையில் அஞ்செட்டி அருகே திருமுமுருக்கு கொண்டை ஊசி வளைவில் உள்ள கீழ்பள்ளம் வனப்பகுதியில் மாணவன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.உறவினர்கள் சடலத்தை கைப்பற்றி அஞ்செட்டி எடுத்து சென்று மறியல் போராட்டத்தை தொடர்ந்தனர். போலீசார் மெத்தனமாக செயல்பட்டதால் தான் மாணவன் உயிரிழந்தாகவும், கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் மறியல் போராட்டம் நடந்தது. மாவட்ட எஸ்.பி., தங்கதுரை பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டு மாலை, 4:30 மணிக்கு மேல் சடலத்தை மீட்டு, தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.


கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது: மாவனட்டியை சேர்ந்த புட்டண்ணன் மகன் மாதேவன், 21 மற்றும் மாரப்பன் மகன் மாதேவன், 21, ஆகியோர் தான், மாணவனை காரில் கடத்தி சென்று வாய், மூக்கை மூடி கொலை செய்து சடலத்தை 50 அடி பள்ளத்தில் வீசியுள்ளனர். கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாணவனுக்கு பீர் வாங்கி கொடுத்து மயக்கமடைய செய்து கொலை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். புட்டண்ணன் மகன் மாதேவன், பெண் ஒருவருடன் நெருக்கமாக இருந்ததை மாணவன் ரோகித் பார்த்துள்ளார். அதை வெளியில் கூறி விடுவார் என்பதால், மாணவனை கொலை செய்துள்ளனர். இருவரையும் கைது செய்துள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

இ.பி.எஸ்., கண்டனம்



இக்கொலை சம்பவத்துக்கு அதிமுக பொதுச் செயலர் இபிஎஸ் கண்டனம் தெரிவித்து வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:


@twitter@https://x.com/EPSTamilNadu/status/1940759417001333016 twitter


கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே, 13 வயதான சிறுவன் காரில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், ஈரோடு குமலன்குட்டை பகுதியைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவன் நேற்று மாலை பள்ளிக்கு அருகில் உயிரிழந்து கண்டறியப்பட்டதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
ஸ்டாலின் ஆட்சியில் எங்கும், எப்போதும், யாருக்கும், யாராலும் பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பது வெட்கக்கேடானது. 13 வயது சிறுவனை காரில் கடத்தி கொலை செய்யும் அளவுக்கு குற்றவாளிகளுக்கு அச்சமற்ற நிலை இருப்பது என்பது, காவல்துறையை நிர்வகிக்க வேண்டிய முதல்வருக்கு உறுத்தவில்லையா?

மாணவர்கள் இடையிலான மோதலில் ஈரோடு ஆதித்யா உயிரிழந்ததாக செய்திகள் வருகின்றன. மாணவர்கள் இடையே எப்படி இவ்வளவு வன்முறை உணர்வு வருகிறது? அடிப்படையிலேயே Flawed அரசாக இந்த திமுக அரசு இருப்பதையே இத்தகைய நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

"இன்று என்ன போட்டோஷூட் எடுக்கலாம்?" என்பதில் மட்டும் இருக்கும் சிந்தையை, "இன்று எப்படி முறையாக அரசை நிர்வகிக்கலாம்?" என்பதில் மாற்ற வேண்டும் என முதல்வரை கேட்டுக்கொள்வதோடு, மேற்கூறிய சம்பவங்களில் குற்றம் இழைத்தோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் இபிஎஸ் கூறியுள்ளார்.

Advertisement