மடப்புரம் அஜித்குமாருக்கு கஞ்சா கொடுத்து தாக்குதல்: போலீஸ் மீது இன்னொரு குற்றச்சாட்டு!: பிரேத பரிசோதனை அறிக்கையில் பகீர் தகவல்

5

திருப்புவனம்: காவல்துறை விசாரணையின் போது உயிரிழந்த மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமாருக்கு போலீசார் கஞ்சா கொடுத்து தாக்கினர் என அவரது உறவினர் குற்றம்சாட்டி உள்ளார். இதனிடையே, பிரதே பரிசோதனையில் இடம்பெற்றுள்ளது குறித்த பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளது.





இது தொடர்பாக அஜித்குமாரின் உறவினரான மனோஜ் பாபு கூறியதாவது: போலீஸ் விசாரணையின் போது அஜித்குமாரிடம் பேசிய போது, கஞ்சா வாடை வந்தது. கஞ்சா குடிக்க வைத்து தான் அடித்தனர். கஞ்சா வாடையை தெரிந்து கொண்ட நான், போலீசாரிடம், அஜித்குமார் போதையில் உள்ளாரா எனக்கேட்டேன். இல்லை என மறுத்தனர். நீங்கள் யார் என கேட்ட பிறகு அதற்கு பதில் கூறிய உடன் என்னை தள்ளி போகுமாறு கூறினர்.


அஜித்குமார் தண்ணீர் கேட்ட போது கொடுக்க மறுத்தனர். பிறகு கொடுத்த போது மிளகாய்ப்பொடி கலந்து கொடுத்தனர். முகத்திலும் தடவினர். இதனை நானும் பார்த்தேன்.

பார்த்தேன் எனக்கூறுவதை விட அருகில் தான் இருந்தேன். அனைத்தும் மாட்டுக் கொட்டகையில் தான் நடந்தது. முதலுதவி செய்தேன். அவரது உயிர் போகும் வரை அருகில் தான் இருந்தேன். அவரது நாடித்துடிப்பை சோதனை செய்த போது நாடித்துடிப்பு இல்லை. மார்பில் கைவைத்து பார்த்தேன். அப்போதும் துடிப்பும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார். தற்போது இவரின் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





@quote@

பிரேத பரிசோதனை அறிக்கை

இந்நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் உள்ள தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில் அஜித்குமாரின் உடலில் 50 வெளிப்புற காயங்கள் உள்ளன. 12 சிராய்ப்பு காயங்கள், ரத்தக்கட்டு உள்ளன. சிகரெட் சூடு வைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டு உள்ளார். தலை கபாலத்தில் அடியும் உள்ளே மூளையில் ரத்த கசிவும் ஏற்பட்டதாக அதில் உள்ளதாக கூறப்படுகிறது.quote

Advertisement