கருணாநிதி வரலாற்றை திணிப்பதில் முதல்வர் குறி: அண்ணாமலை குற்றச்சாட்டு

13

சென்னை: '' நம் குழந்தைகள் கல்வி குறித்தோ, கர்ப்பிணிகள் குறித்தோ எந்தக் கவலையுமில்லாமல், தனது தந்தையின் வரலாறை, பள்ளிப் பாடத்திட்டத்தில் திணிப்பதில்தான் குறியாக இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின் '' என தமிழக பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.


இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில், தேசிய ஊட்டச்சத்து திட்டமான போஷான் அபியான் திட்டத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. மேலும், தமிழகப் பள்ளிகள் திறந்து ஒரு மாதம் ஆகியும், புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மதிய உணவுத் திட்டத்துக்குத் தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருள்கள், வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது.

கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகள் பிறக்கும் காலத்தில், அவர்களின் ஆரோக்கியத்தை நோக்கமாகக் கொண்டு, நமது பிரதமர் மோடியால் கொண்டு வரப்பட்ட திட்டம் போஷன் அபியான். நம் குழந்தைகள் பசியின்றிக் கல்வி கற்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் காமராஜரால் கொண்டு வரப்பட்டு, எம்ஜிஆரால் மேம்படுத்தப்பட்ட திட்டம் மதிய உணவுத் திட்டம். அதற்கான நிதியில் ஒரு பங்கு, மத்திய அரசால் வழங்கப்படுகிறது. ஆனால், நம் குழந்தைகள் கல்வி குறித்தோ, கர்ப்பிணிகள் குறித்தோ எந்தக் கவலையுமில்லாமல், தனது தந்தையின் வரலாறை, பள்ளிப் பாடத்திட்டத்தில் திணிப்பதில்தான் குறியாக இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

போஷான் அபியான் திட்டத்துக்கு, மத்திய அரசு கடந்த 2023 - 2024 ஆண்டு ரூ.398.52 கோடி. சென்ற 2024 - 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை வழங்கிய தொகை ரூ.324.2 கோடி. இந்த நிதி எல்லாம் எங்கே செல்கிறது?


@twitter@https://x.com/annamalai_k/status/1940755517611385032twitter

கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊட்டச்சத்துப் பெட்டகத்தில் ஊழல் செய்தது போதாதா? ஒட்டு மொத்த நிதியையுமே முடக்கும் திட்டமா? உடனடியாக, போஷான் அபியான் திட்ட ஊழியர்களுக்கான சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்றும், பள்ளிகளில் மதிய உணவுக்கான பொருள்கள் உடனடியாக வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.

Advertisement