சட்டக் கல்லுாரி மாணவர்களுக்கு புதிய விடுதி எப்போது: முதல்வருக்கு இ.பி.எஸ்., கேள்வி

சென்னை: உள்ளிருப்பு போராட்டம் நடத்திய சட்டக் கல்லுாரி மாணவர்களுக்கு தங்குவதற்கு புதிய விடுதி எப்போது கட்டி முடிப்பீர்கள் என்று அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கேள்வி எழுப்பி உள்ளார்.
அவரது அறிக்கை:
சட்டக் கல்லூரி மாணவர்கள் இன்று என்னை நேரில் சந்தித்து, தாங்கள் தங்கும் சட்டக் கல்லூரியில் போதிய விடுதி வசதியின்மை, மோசமான கழிவறை பராமரிப்பு மற்றும் அடிப்படை வசதியின்மை குறித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதாகவும், நடவடிக்கை எடுக்கப்படும் என்று தி.மு.க.,அரசு உத்தரவாதம் அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை நிறுத்தியதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.
ஆனால், அதன் பிறகு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், குறிப்பாக இந்தாண்டு சட்டத்துறை மானிய கோரிக்கையின்போது சுமார் 21.50 கோடி ரூபாய் மதிப்பில் புதிய விடுதி கட்டிடம் பல்கலைக்கழக வளாகத்திலேயே கட்டப்படும் என்று அறிவித்த நிலையில், இதுவரை எந்த முன்னெடுப்பு செய்யப்படவில்லை என்றும் என்னிடம் முறையிட்டனர்.
தற்போது அரசின் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான கட்டிடம் ஒன்றில் மாணவர்களில் சிலர் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், பல மாணவர்கள் தனியார் விடுதிகளில் தங்குவதாகவும், அவர்களால் அதிக வாடகை கொடுத்து தங்க முடியாத சூழ்நிலை இருப்பதாகவும் தெரிவித்தார்கள்.
குறிப்பாக எனது தலைமையிலான அம்மாவின் அரசு, மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவித உள் இட ஒதுக்கீடு வழங்கியது. இதைத் தொடர்ந்து இந்த அரசு மற்ற தொழிற்கல்விகளுக்கும் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை விரிவுபடுத்தியது. மாணவர் விடுதியில் இடமிருந்தும் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சட்டக் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் ஏழை மாணவர்களுக்கு அறைகள் ஒதுக்கப்படாததால் மிகுந்த சிரமத்தத்துடன், அதிக கட்டணம் கொடுத்து தனியார் விடுதிகளில் தங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான கட்டடத்தில் பல அறைகள் காலியாக இருந்தும் பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்து கிடப்பதால் மாணவர்கள் அங்கு முழுமையாக தங்குவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை என்று தெரிவிக்கின்றனர்.
எனவே, இந்த அரசு சட்டப்பேரவையில் அறிவித்தவாறு புதிய விடுதியை உடனடியாக கட்டி முடிக்க வேண்டும். அதுவரை பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான கட்டடத்தை சீரமைத்து அங்கு அனைத்து மாணவர்கள் இலவசமாக தங்கவும், அவர்களுக்கு உணவு வசதியை ஏற்படுத்தித்தரவும் முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு இ.பி.எஸ்., அறிக்கையில் கூறியுள்ளார்.