இந்தியாவில் ஹாக்கி விளையாட பாக்., அணிக்கு மத்திய அரசு அனுமதி

5


புதுடில்லி: அடுத்த மாதம் இந்தியாவின் பீஹாரில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை ஹாக்கி போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் அணிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பின்னர் இரு நாடுகள் இடையே நிலவிவரும் அசாதாரண சூழலுக்கு இடையே இந்த ஒப்புதல் முக்கியமாக பார்க்கப்படுகிறது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே பல ஆண்டுகளாக பிரச்னை நீடித்து வருகிறது. இரு நாடுகளிடையேயான உறவுகளில் ஏற்பட்ட விரிசல், விளையாட்டு துறையிலும் எதிரொலித்தது. கிரிக்கெட் உட்பட எந்தவொரு விளையாட்டிலும் பல ஆண்டுகளாக இந்திய அணியினர், பாகிஸ்தான் சென்று விளையாடுவதில்லை. அதேபோல், அவர்களும் இங்கு வந்து விளையாடுவதில்லை. ஆசிய கோப்பை, உலக கோப்பை போன்ற சில தொடர்களில் மட்டுமே நேருக்கு நேர் மோதும் சூழல் ஏற்படுகிறது. மற்றபடி இரு நாடுகளும் தனிப்பட்ட தொடர்களில் விளையாட்டை தவிர்த்து வந்தன.

சில நேரங்களில் இந்தியா உடன் போட்டிகளில் விளையாட பாகிஸ்தானை சேர்ந்த அமைச்சர்கள், விளையாட்டு வீரர்கள் ஆர்வம் காட்டி, வெளிப்படையாக தெரிவித்துள்ளனர். ஆனால், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் அதைத் தொடர்ந்து இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் ஆகியவற்றைத் தொடர்ந்து அதிகரித்த பதட்டம் காரணமாக இரு நாடுகளும் மீண்டும் பரம எதிரிகள் பிம்பத்திற்கு சென்றுள்ளன.

இந்த நிலையில், இந்தியாவில் ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 7 வரை ஆடவர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் பாகிஸ்தான் அணி பங்கேற்க முன்வருமா, அதற்கு இந்தியா சம்மதிக்குமா என கேள்விகள் எழுந்தன. ஆனால், இப்போது மத்திய அரசு தரப்பில் பாகிஸ்தான் அணி பங்கேற்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம், வெளியுறவுத் துறை அமைச்சகம், மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் பாக்., பங்கேற்க ஒப்புதல் வழங்கியுள்ளன.

மத்திய விளையாட்டுத் துறை அமைச்சக வட்டாரங்கள் தரப்பில் கூறுகையில்,
@quote@''பல நாடுகள் பங்கேற்கும் போட்டிகளில் எந்த அணி இந்தியாவில் விளையாடுவதையும் நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், இருதரப்புத் தொடர்கள் வேறு''quote என்று தெரிவித்துள்ளன. இந்த ஒப்புதல் காரணமாக ஆசிய கோப்பையின்போது இந்தியாவும் பாகிஸ்தானும் ஹாக்கி களத்தில் மோதுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளன.

Advertisement