பாகிஸ்தான் ஆயுதங்களை சூறையாடிய ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணைக்கு கூடியது மவுசு; வாங்க போட்டி போடும் நாடுகள்!

4

புதுடில்லி: ஆபரேஷன் சிந்து நடவடிக்கையின் போது பாகிஸ்தான் ஆயுதங்களை சூறையாடிய ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணையை வாங்குவதில் பிரேசில் ஆர்வம் காட்டியுள்ளது.


பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாதிகளின் முகாம்களை இந்திய போர் விமானங்கள் வேட்டையாடின. பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக போரில் குதித்த பாகிஸ்தானை நம் ராணுவம் ஓட, ஓட அடித்தது. அதன் விமானப்படை தளங்கள், ராணுவ தளங்களை குண்டு வீசி சிதைத்தது.


பாகிஸ்தான் நம் மீது ஏவிய ஏவுகணைகளையும், கொத்து கொத்தாக வந்த ட்ரோன்களையும் நடுவானிலேயே தூள் தூள் ஆக்கியது. இந்தியா அடி கொடுத்ததிலும், பாகிஸ்தான் அடியை நேர்த்தியாக முறியடித்ததிலும் சிறப்பாக செயல்பட்டது. இது உலக அளவில் கவனம் பெற்றது.
இந்தியா உள் நாட்டிலேயே தயாரித்த ஆயுதங்களுக்கு இப்போது மவுசுவந்து விட்டது.


பல நாடுகள் நம்மிடம் ஆயுதம் கேட்க ஆரம்பித்து விட்டன. அந்த வகையில் ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை வேண்டும் என்று பிரேசில் கேட்டு இருக்கிறது.கூடவே கடலோர கண்காணிப்பு ரேடார்கள், ரோந்து கப்பல்கள், ஸ்கார்பீன் ரக நீர் மூழ்கி கப்பல்கள், கருடா பீரங்கி துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றையும் இந்தியாவிடம் இருந்து வாங்க பிரேசில் முடிவு செய்திருக்கிறது. மோடி தனது 5 நாடு பயணத்தின் முக்கிய அம்சமாக, 5 முதல் 8ம் தேதி வரை பிரேசிலில் நடக்கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.


கூடவே பிரேசில் நாட்டின் தலைவர்களுடன் தனியாக பேச்சு வார்த்தை நடத்துகிறார். அப்போது பிரேசிலுக்கு ஆயுதங்கள் விற்பது தொடர்பாக முக்கிய திட்டம் உறுதி செய்யப்படும் என்று நம் வெளியுறவு அமைச்சகம் கூறி உள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான போரில் ரஷ்யா நமக்கு தந்த எஸ்-400 ஏவுகணையும், ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணையும் முக்கிய பங்கு வகித்தது. ஏ.ஐ., தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை எதிரிகளின் ட்ரோன்கள், ஏவுகணைகள், போர் விமானங்களை 100 சதவீதம் சுட்டு வீழ்த்தும் சக்தி கொண்டது.


இதில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள், தரையில் இருந்து பறந்து சென்று வானில் வரும் எதிரிகளின் ஆயுதங்களை இடைமறித்து துல்லியமாக அழிக்கும்.இதில் சக்தி வாய்ந்த ராஜேந்திரா என்னும் ரேடார் வசதி உள்ளது. எதிரியின் இலக்கு 180 கிலோ மீட்டருக்கு அப்பால் வரும் போதே துல்லியமாக கண்டுபிடித்து தகவல் அனுப்பி விடும். மறுகணமே, ஏவுகணையை ஏவி அதை தவிடுப்பொடியாக்கும் வேலையை துவங்கும்.


25 கிலோ மீட்டர் தூரத்தில் எதிரியின் இலக்கு வரும் போது, அதை சுக்குநூறாக நொறுக்கி விடும்.
ராணுவத்துக்கும், விமானப்படைக்கும் தனித்தனி ஸ்டைலில் ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை தயாரிக்கப்பட்டு உள்ளது. மணிக்கு 4,321 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்து தாக்க கூடியது.
இதன் தாக்கும் திறன் 100 சதவீதம் என்கின்றனர். எதிரி அனுப்பும் எந்த ஆயுதமும் தப்ப முடியாது. எனவே தான் இதை பிரேசில் நாடு விரும்பி கேட்கிறது. இந்த வான் பாதுகாப்பு ஏவுகணையை வாங்க பல்வேறு நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement