மூன்றாவது சுற்றில் ஜோகோவிச்: விம்பிள்டன் டென்னிசில் அசத்தல்

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் 3வது சுற்றுக்கு செர்பியாவின் ஜோகோவிச் முன்னேறினார்.


லண்டனில், விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பிரிட்டனின் டேனியல் ஈவன்ஸ் மோதினர். அபாரமாக ஆடிய ஜோகோவிச் 6-3, 6-2, 6-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 3வது சுற்றுக்குள் நுழைந்தார். மற்றொரு 2வது சுற்றில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் 4-6, 6-2, 6-4, 6-0 என பிரான்சின் ஆர்தர் கசாக்சை வீழ்த்தினார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் ரஷ்யாவின் மிர்ரா ஆன்ட்ரீவா, இத்தாலியின் லுாசியா புரோன்செட்டி மோதினர். இதில் ஆன்ட்ரீவா 6-1, 7-6 என்ற கணக்கில் வெற்றி பெற்று 3வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் எம்மா நவரோ 6-1, 6-2 என ரஷ்யாவின் வெரோனிகா குடர்மெடோவாவை தோற்கடித்தார்.

பிரிட்டனின் எம்மா ரடுகானு 6-3, 6-3 என செக்குடியரசின் மார்கெடா வான்ட்ரூசோவாவை வீழ்த்தினார். ஜப்பானின் நவோமி ஒசாகா 6-3, 6-2 என செக்குடியரசின் கேட்ரினா சினியகோவாவை வென்றார்.


போபண்ணா ஜோடி தோல்வி
ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி, மெக்சிகோவின் மிகுயல் ரெய்ஸ்-வரேலா ஜோடி 6-4, 6-4 என அமெரிக்காவின் அலெக்சாண்டர் கோவாசெவிக், லேர்னர் டியன் ஜோடியை வீழ்த்தியது.

* மற்றொரு முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, பெல்ஜியத்தின் சான்டர் கில்லே ஜோடி 3-6, 4-6 என ஜெர்மனியின் கெவின், டிம் ஜோடியிடம் தோல்வியடைந்தது.

Advertisement