யார் அந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி: கேட்கிறார் மார்க்சிஸ்ட் சண்முகம்

12

திருப்புவனம்: '' மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் வழக்கில் தலைமைச் செயலகத்தில் இருந்து ஐ.ஏ.எஸ்., அதிகாரி யாரோ தலையிட்டு தான் காவல்துறையினர் கொடூரமாக நடக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக சொல்கிறார்கள் . அந்த அதிகாரி யார் என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேணடும்,'' என மார்க்சிஸ்ட்கட்சியின் மாநில செயலர் சண்முகம் கூறியுள்ளார்.



மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் குடும்பத்துக்கு ஆறுதல் கூறிய பிறகு நிருபர்களிடம் அவர் கூறியதாவது: போலீசார் குற்றவாளிகளுக்கு நேரடியாக தண்டனை தருவது, என்கவுன்டர் என்ற பெயரில் கொலை செய்வது, கைகால்களை முறிப்பது அனைத்தும் சட்டவிரோதமானது. மனித உரிமையை மீறக்கூடிய செயலாகும். இந்த சம்பவங்களில் எல்லாம், உரிய காலத்தில் தமிழக அரசு தலையிட்டு சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுத்து இருந்தால் அஜித்குமார் இழந்திருக்க மாட்டோம்.


இதில் வெளிவராத விஷயம் என்பது, தலைமைச் செயலகத்தில் இருந்து ஐ.ஏ.எஸ்., அதிகாரி யாரோ தலையிட்டுதான் இந்தளவுக்கு மிக கொடூரமாக போலீசார் நடந்து கொள்ளக்கூடிய அழுத்தத்தை ஐ.ஏ.எஸ்., அதிகாரி கொடுத்ததால் தான் சம்பவம் நடந்தது என அனைவரும் பேசுகின்றனர் ஆனால், அந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி யார் என்பது விவரம் வெளிப்படாமல் மூடி மறைக்கும் நிலை உள்ளது. வெளிப்படைத்தன்மை இல்லாத நிலை உருவாக்குகிறது
சம்பந்தப்பட்ட ஐ.ஏ.எஸ்., அதிகாரி யார் என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இரண்டு பெண்கள் வந்த கார் யாருக்கு உரிமையானது . இந்த மாதிரியான பல கேள்விகளுக்கு விடை தெரியாமல் இந்த வழக்கு உள்ளது.


சி.பி.ஐ.,யிடம் ஒப்படைத்து விட்டதால், இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய பொறுப்பு இல்லை என தமிழக அரசு கருதக்கூடாது. இந்த வழக்கு சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு, விசாரணை நடைபெற வேண்டும் என்பதற்காகவும், தமிழக போலீசார் சம்பந்தப்பட்டு உள்ளதாலும் சி.பி.ஐ.,க்கு மாற்றுகிறோம் என முதல்வர் கூறியுள்ளார். அதேபோல் நான் எழுப்பிய கேள்விக்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும். மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்


இனிமேல் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருப்பதற்கு அரசு என்ன செய்ய வேணடும் என யோசிக்க வேண்டும். இதுபோன்ற நடக்காமல் இருக்க வேண்டும் என்பதற்கு குழு அமைத்து போலீஸ் அதிகாரிகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற வகையில் திட்டத்தை உருவாக்க வேண்டும்.


நேற்று டி.ஜி.பி., பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளார். இவ்வளவு நாட்கள் எஸ்பி.,யும் டி.எஸ்.பி.,யும் தனிப்படைகள் என்ற பெயரில் ரவுடி கூட்டத்தை வைத்து கொண்டு செயல்பட்டுள்ளனர் என்பதற்கு இந்தசம்பவம் ஒரு எடுத்து காட்டு. இனிமேல் அந்த படைகள் கலைக்கப்படும். 6 மணிக்கு மேல் லாக்கப்பில் கைதிகளை வைக்கக்கூாடது என்பது எல்லாம் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க உதவும்.

போலீசார் மனித உரிமைகள் மதிப்பது கிடையாது. எல்லாவற்றையும் விட தாங்கள் உயர்ந்தவர்கள் என்ற எண்ணோட்டத்தில் போலீசார் நடந்து கொண்டுள்ளனர். மனித உரிமை என்பது எல்லாவற்றையும் விட மேலானது. மனித உயிர் எல்லாவற்றையும் விட மேலானது.

மனித உரிமையை காலில் போட்டு மிதிப்பது என்பதும், மனித உயிர்களை காவு வாங்குவது என்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத மிகக்கொடூரமான விஷயம். இந்த விஷயத்தில் தமிழக அரசு இதுபோன்ற சம்பவங்கள் வகையில் நடவடிக்கை இருக்க வேண்டும்.


அஜித்குமாரின் சகோதரருக்கு அரசு வேலை வழங்கியது மட்டும் போதுமானது அல்ல. போதுமான இழப்பீட்டு தொகை வழங்க முன்வர வேண்டும். வழக்கில் எந்தவித குறுக்கீடும் இல்லாமல், இந்த வழக்கு நியாயமாக நடைபெற வேண்டும். ஐகோர்ட் மதுரை கிளை தலையிட்டதால், இவ்வளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சி.பி.ஐ., விசாரணை உத்தரவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. ஐகோரட் தொடர்ந்து கண்காணிக்கும். அஜித்குமாருக்கு நீதியும், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரணமும் வேண்டும்.


எப்.ஐ.ஆர்., போடாமல் எப்படி போலீசார் இவ்வளவு ஆர்வம் காட்டினார்கள் என்பது சந்தேகத்துக்கு உரியதாக இருக்கிறது. மனிதனை கொலை செய்யவேண்டிய அளவு குற்றம் கிடையாது. எவ்வளவு பெரிய குற்றமாக இருந்தாலும், தண்டனை கொடுக்க இவர்கள் யார்? கோவில் அருகே கொலை நடந்தது அதிர்ச்சி அளிக்கிறது. வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் குற்றவாளி கூண்டில் நிறுத்த வேண்டும். யாராக இருந்தாலும் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டு அனைவருக்கும் தண்டனை பெற்று தர வேண்டும். நீதியும், நிவாரணம் பெற்றுத்தர கட்சி துணை நிற்கும். சாட்சிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement