தேசியம் பேட்டி: மவுனம் காப்பது ஏன்?

நம் நாட்டிலுள்ள ஒரு உற்பத்தி ஆலையில் இருந்து சீன பொறியாளர்கள் வெளியேறுவதாகவும், அரிய மண் காந்தங்களை ஏற்றுமதி செய்வதில் அந்நாடு கட்டுப்பாடு விதிப்பதாகவும், ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. இதில், மத்திய அரசு மவுனம் காப்பது ஏன்? மோடியின் சீன உத்தரவாதத்திற்கு காலாவதி தேதி இல்லை.
மல்லிகார்ஜுன கார்கே காங்., தேசிய தலைவர்
குழந்தை போல அழக்கூடாது!
பீஹாரில், பா.ஜ., - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது. இதற்காக வரும் சட்டசபை தேர்தலில், காங்., - ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் கூட்டணி வைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறேன். அக்கூட்டணியினர் ஒத்துவரவில்லை என்றால், தேர்தலுக்கு பின் குழந்தை போல அழக்கூடாது.
அசாதுதீன் ஓவைசி, தலைவர், ஏ.ஐ.எம்.ஐ.எம்.,
குரல் கொடுக்க வேண்டும்!
ஜானகி வெர்சஸ் ஸ்டேட் ஆப் கேரளா திரைப்படத்துக்கு மத்திய தணிக்கை வாரியம் அனுமதி மறுத்துள்ளது. இந்த படத்தில் நடிக்கும் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி அமைதியாக இருக்கிறார். சினிமா தன் உயிர்நாடி எனக் கூறும் அவர், ஏன் எதுவும் பேசாமல் இருக்கிறார்? மற்ற கலைஞர்களுக்காகவாவது அவர் குரல் கொடுக்க வேண்டும்.
கே.சி.வேணுகோபால், பொதுச்செயலர், காங்.,
புதிய சட்டங்கள் தேவையற்றவை!
மத்திய அரசின் மூன்று புதிய கிரிமினல் சட்டங்கள் தேவையற்றவை; இவை, நீதி நிர்வாகத்தில் குழப்பத்தை மட்டுமே ஏற்படுத்தி உள்ளன. ஏற்கனவே இருந்த சட்டங்களில் இருந்த பெரும்பாலானவை அப்படியே உள்ளன. புதிய சட்டங்கள், பழைய சட்டங்களில் இருந்து வெட்டி ஒட்டப்பட்டுள்ளன.
சிதம்பரம், ராஜ்யசபா எம்.பி., காங்கிரஸ்