'முறைகேடா நடந்தது... எதற்கு மறு தேர்வு?'

சென்னை:மின் தடையால், 'நீட்' தேர்வை முழுமையாக எழுத முடியாததால், மறு தேர்வு நடத்த கோரி, மாணவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு, கடந்த மே 4ம் தேதி நடந்தது. அன்றைய நாளில், சென்னையில் காற்றுடன் பெய்த பலத்த மழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

மின் தடையால், தங்களால் தேர்வை முழுமையாக எழுத முடியவில்லை என்றும், மறு தேர்வு நடத்த கோரியும், 16 பேர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், '22 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், மறு தேர்வு நடத்த உத்தரவிட்டால், அது தீவிர தாக்கத்தை ஏற்படுத்தும்' என கூறி, மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து, மாணவர்கள் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வு, 'தேர்வில் முறைகேடுகள் நடந்து உள்ளதாக நிரூபிக்காத வரை, மறு தேர்வு நடத்த உத்தரவிட முடியாது' என கூறி, மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Advertisement