பரந்துார் ஏர்போர்ட் திட்டத்தில் மறுகுடியமர்வுக்கு...சலுகைகள்:5 சென்ட் நிலம், அரசு வேலை, ரூ.1 கோடி கடன் வசதி

சென்னை:காஞ்சிபுரம் மாவட்டம் பரந்துாரில், விமான நிலையம் அமைய உள்ள பகுதிகளில் வசிப்போரின் மறு குடியமர்வுக்கு, தமிழக அரசு எப்போதும் இல்லாத வகையில் தாராளமாக சலுகைகளை வாரி வழங்கியுள்ளது.
புதிதாக உருவாகும் நகரில் குறைந்தது, 5 சென்ட் நிலம், 400 சதுர அடியில் வீடு, தாங்களே வீடு கட்ட விரும்புவோருக்கு 8 லட்சம் ரூபாய், அரசு வேலை, சுய தொழில் துவங்க, 1 கோடி ரூபாய் கடன் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அரசு அறிவித்துள்ளது.
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்துக்கு வரும் பயணியர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, சென்னையின் இரண்டாவது விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துாரில் அமைக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக, பரந்துார் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில், 3,774 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. நிலம் எடுக்க திட்டமிட்டுள்ள இடங்களில் சிறுவள்ளூர், மடப்புரம், மகாதேவிமங்களம், மதுரமங்கலம் ஆகிய நான்கு கிராமங்களில், 1,000 - 1,100 குடும்பங்கள் வசிக்கின்றன.
இந்த குடும்பத்தினர், விமான நிலையம் அமைய உள்ள இடத்திற்கு அருகில் மறுகுடியமர்வு செய்யப்பட உள்ளனர்.
இதற்காக, 245 ஏக்கரில் குடியிருப்பு, பள்ளி, வழிபாட்டு தளம், ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய நான்கு, 'டவுன்ஷிப்' எனப்படும் புதிய நகரை, 'டிட்கோ' எனப்படும் தமிழக அரசின் தொழில் வளர்ச்சி நிறுவனம் உருவாக்க உள்ளது.
அரசு அரசாணை
மறுகுடியமர்வு செய்யப்படும் குடும்பத்தினருக்கு, அதிக நிதியுதவியுடன் கூடிய புதிய சலுகைகளை அறிவித்து, அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
அதன்படி,
ஏற்கனவே, 1 சென்ட், 2 சென்ட் என, 5 சென்ட் வரை வீடு வைத்துள்ள அனைவருக்கும், புதிதாக உருவாக்கப்படும் நகரில் வீடு கட்ட, 5 சென்ட் நிலம் வழங்கப்படும்.
மேலும், 5 முதல் 7 சென்ட் வரை வைத்துள்ளவருக்கு, 7 சென்ட் வழங்கப்படும்; 7 சென்ட்டுக்கு மேல் வைத்துள்ளவருக்கு, 10 சென்ட் நிலம் வழங்கப்படும்
அரசின் சார்பில், 400 சதுர அடியில் வீடு கட்டி தரப்படும்; அதற்கு பதில் தாங்களே சொந்தமாக வீடு கட்டி கொள்ள விரும்பினால், 8 லட்சம் ரூபாய் வழங்கப்படும்
பாதிக்கப்படும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அல்லது மாதம், 3,000 ரூபாய் வீதம் 20 ஆண்டுகளுக்கு நிதியுதவி அல்லது ஒரு முறை செட்டில்மென்ட்டாக, 7.50 லட்சம் ரூபாய் வழங்கப்படும்
வீட்டில் உள்ள பொருட்களை எடுத்து செல்ல போக்குவரத்து செலவாக, 70,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்; இடம்பெயரும் குடும்பத்திற்கு மீள்குடியேற்ற உதவி தொகையாக, 70,000 ரூபாய் ஒருமுறை வழங்கப்படும்
பாதிக்கப்படும் குடும்பத்தை சேர்ந்தவர்கள் சுய தொழில் துவங்க, 30 சதவீத மானியத்துடன், 1 கோடி ரூபாய் கடன் வழங்கப்படும். இது தவிர, 3 சதவீத வட்டி மானியமும் வழங்கப்படும்
சரக்கு போக்குவரத்து, 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா விமானம், மோட்டார் வாகனம், பியூட்டி பார்லர் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் தொடர்பாக தலா, 15,000 ரூபாய் செலவில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும்
வீட்டிற்கு பத்திரப்பதிவு கட்டணம், முத்திரைத்தாள் செலவை அரசு ஏற்கும்
மாற்றுத்திறனாளிகள், கணவனை இழந்த பெண்கள் என, மிகவும் ஏழ்மையில் உள்ளவர்களுக்கு அரசு சார்பில் ஒரு வணிக கடை கட்டி தரப்படும்.
இவ்வாறு, அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
இதுவே முதல்முறை
தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பரந்துார் விமான நிலைய திட்டத்திற்கு நிலம் எடுக்கும்போது பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இழப்பீட்டை தவிர, தற்போது கூடுதல் சலுகைகளை அறிவித்து அரசு உத்தரவிட்டு உள்ளது.
அரசு, ஒரு திட்டத்திற்காக நிலத்தை எடுக்கும்போது, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஒரே சமயத்தில் இவ்வளவு சலுகைகள் வழங்குவது, இதுவே முதல்முறை.
இவ்வாறு அவர் கூறினார்.