அர்ச்சுனன் தபசு விழா ஊத்துக்காடில் விமரிசை

வாலாஜாபாத்:ஊத்துக்காடு, திரவுபதியம்மன் கோவிலில் அர்ச்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் விமரிசையாக நடந்தது.

வாலாஜாபாத் ஒன்றியம், ஊத்துக்காடு கிராமத்தில் திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் அக்னி வசந்த விழா கடந்த மாதம் 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி, தினமும் மகாபாரத சொற்பொழிவும், இரவில் நாடகமும் நடந்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கவுரவர்களுக்கு எதிரான குருஷேத்திர யுத்தத்தில் வெற்றி பெற பாசுபத அஸ்திரம் வேண்டி அர்ச்சுனன தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி தெருக்கூத்து கலைஞர்களால் நேற்று முன்தினம் நடந்தது.

விரதம் இருந்த நாடக கலைஞர் அர்ச்சுனன் வேடம் அணிந்து 50 அடி உயர தபசு மரத்தில் ஒவ்வொரு படிக்கும் ஒரு பாடல் படியபடி ஏறினார்.

அப்போது தபசு மரத்தின் கீழே பெண்கள் பலர் குழந்தை வரம் வேண்டியும், திருமணம் தடை நீங்கவும் பிரார்த்தனை செய்தனர்.

மரத்தின் உச்சியில் நின்று வீசப்பட்ட எலுமிச்சை பழம் மற்றும் பூக்கள் உள்ளிட்டவைகளை பெண்கள் ஆர்வத்தோடு தேடி எடுத்து சென்றனர்.

விழாவின் நிறைவாக வரும் 6ம் தேதி காலை துரியோதனன் படுகளமும், மாலை 6:00 மணிக்கு தீமிதி திருவிழாவும் நடைபெற உள்ளது.

Advertisement